விழா மேடையில் மயங்கி விழுந்த அமைச்சர்! - கோவையில் பரபரப்பு | Minister KP Anbazhagan faints on stage at event in Coimbatore university

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (26/02/2019)

கடைசி தொடர்பு:16:43 (26/02/2019)

விழா மேடையில் மயங்கி விழுந்த அமைச்சர்! - கோவையில் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் 35-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினர். விழா நிறைவடையும் தருவாயில், அமைச்சர் அன்பழகன் மயங்கி விழுந்ததால் அந்த இடம் பரபரப்பானது.

அமைச்சர் மயக்கம்

பாரதியார் பல்கலை கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் முனைவர் படிப்புகளை நிறைவு செய்த  88,762 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ``தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது. 18 வயது முதல்  23 வயது வரை உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம். 

2020-ம் ஆண்டு உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கையை 30 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்த நிலையில், 2017- 2018ம் ஆண்டு அறிக்கையின்படி தமிழகத்தில் 48.6 சதவிகிதம் பேர் உயர் கல்வி பெற்றிருப்பதாக தெரிவித்தார். இந்திய அளவில் 21.8 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் கல்வி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 42.1 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் கல்வி பெற்றுள்ளனர். அதேபோல இந்திய அளவில் 15.9% பழங்குடியினர் உயர் கல்வி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 40.5 சதவிகிதம் பேர் உயர் கல்வி பெற்றுள்ளனர்" என்றார்

விழா நிறைவடையும் தருவாயில் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கமடைந்த அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  சிகிச்சைக்குப் பிறகு, சற்று நேரத்தில் அமைச்சர் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், `கோவை பாரதியார் கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவருடைய பதவிக்காலம் முடியும் வரை புதிய துணைவேந்தர் நியமனம் செய்ய முடியாது. அவருடைய பதவி காலம் முடிந்ததும், புதிய துணை வேந்தர் விரைவில் நியமிக்கப்படுவார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இடம் மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close