``அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டத்துக்கு எதையுமே செய்யலை!" - குற்றம்சாட்டும் பொதுமக்கள் | "MPs and MLAs grow up, Cuddalore city does not grow!" - People in lamentation

வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (27/02/2019)

கடைசி தொடர்பு:13:52 (27/02/2019)

``அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டத்துக்கு எதையுமே செய்யலை!" - குற்றம்சாட்டும் பொதுமக்கள்

கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஜவான் பகதூர் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா அமைத்தல் என எதிலும் ஊழல் மயமாக உள்ளது. மொத்தத்தில் மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாகக் கடலூர் உள்ளது.

``அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டத்துக்கு எதையுமே செய்யலை!

``குவியல்குவியலாகக் குப்பைகள்; குண்டும்குழியுமான சாலைகள்; ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவுகள்; போக்குவரத்து நெரிசல்மிகுந்த சாலைகள்; ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகக் குறுகிய பஸ் நிலையம்; நீர்நிலை ஆக்கிரமிப்புகள்; சுற்றுச்சூழல் மாசு எனப் பலவற்றால் மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாகக் கடலூர் மாவட்டம் இருக்கிறது"  என்கின்றனர், மக்கள். 


  கடலூர்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவின் தலைநகராகக் கடலூர் இருந்துள்ளது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய 3 ஆறுகள் இங்குக் கடலில் கலப்பதால் `கூடலூர்' என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் அது மருவி `கடலூர்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடலூரைச் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகின்றது. மைசூர் மன்னர் ஹைதர் அலி கட்டுப்பாட்டில், கடலூர் இருந்தபோது ஆங்கிலேயர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆங்கிலேயர்கள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் புனித டேவிட் கோட்டையைக் கட்டி, தென் இந்தியாவின் தலைநகராக வைத்திருந்துள்ளனர். இதற்கு ஆதாரமாகச் சாலைகளின் பெயர்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் இருக்கின்றன. இப்படி வரலாற்றுப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட கடலூர், இன்று வளர்ச்சிபெறாமல் இருக்கும் நகராகவே திகழ்கிறது. கடலூர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது. கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பிரிக்கப்பட்டு, கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னாற்காடு வள்ளலார் மாவட்டமாகவும், விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் மாவட்டமாகவும் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர், அது கடலூர் மாவட்டம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் பிரிந்து 25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் பெற்றுள்ளது. ஆனால், கடலூர் மாவட்டம் இன்னும் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது. 

கடலூர்

இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடம் பேசினோம்.... 

நெல்சன் ராஜ்குமார்நம்ம கடலூர் இயக்கத்தின் செயலாளர் நெல்சன் ராஜ்குமார், ``கடலூர் மாவட்டத்தில் 3 வருடத்தில் 7  மாவட்ட கலெக்டர் மாறியிருக்காங்க. அதே மாதிரி நகராட்சி ஆணையர், மாவட்டக் கல்வி அதிகாரி என யாரையும் இங்கு நீண்டநாள் பணி செய்யவிட்டதே இல்லை. அவுங்க வந்து நகரைப்பற்றிப் புரிந்துகொள்வதற்குள் அவர்களை மாற்றிவிடுகிறார்கள். இதனாலேயே பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மக்கள், பொழுதுபோக்கிற்கு என்று இருக்கிற ஒரே இடம் கடலூரில் சில்வர் பீச்தான். அங்கேயும் சரிவர பராமரிப்பு இல்லாத கழிவறை, உடைந்த விளையாட்டு உபகரணங்கள், குப்பைகள் என அலங்கோலமாக இருக்கு. இங்குத் தமிழகத்தில் எங்கேயும் இல்லாத  கார், இரண்டு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகரில் ரூ.30 கோடியில் பல இடங்களில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், லட்சக்கணக்கில் ஊழல். இதேபோல் மழை நீர் வடிகால் அமைக்கிறார்கள். பின்னர், அது சரியில்லை என்பதால் மீண்டும் அதே இடத்தில் தோண்டிவிட்டுப் புதிதாக அமைக்கிறார்கள். இப்படி எந்தப் பணி நடந்தாலும் ஊழல்தான். நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கிடப்பில் உள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ன ஆச்சு என்றே தெரியலை. ஒரே நீர் ஆதாரமான கொண்டங்கி ஏரி தூர்வாரப்படவில்லை. சாலைகளில் சென்டர் மீடியா, அண்டர் கேபிள் சிஸ்டம் என வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை" என்றார் வேதனையுடன்.

நிஜாமுதீன்

நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புத் தலைவர் நிஜாமுதீன், ``தமிழ்நாட்டிலேயே புறவழிச்சாலை இல்லாத தலைநகர் கடலூர்தான். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கு. நாகை மாவட்டத்தில்  அணைக்கரை பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதியில்லாததால் கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்து செல்லும் வாகனங்கள் கடலூர் வழியாகத்தான் சென்னைக்குச் செல்கிறது. புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் ஆர்ஜிதம் செய்ய அதிகாரிகள் எல்லாம் நியமிக்கப்பட்டும், சிப்காட் தொழிற்சாலைக்காக மாற்றிமாற்றி அப்பணி தடைப்பட்டுள்ளது. சின்ன, நெருக்கடியான பஸ் நிலையம். அருகில் தனியார் இடம் இருந்தும் இதனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை இல்லை. ஆனால், மேலும்மேலும் பல கடைகளைக் கட்டிப் பயணிகளுக்கு நெருக்கடி தர்றாங்க. ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில், `புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும்' என்று சொன்னார்கள், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டது. 

எம்.சி.சம்பத்அதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டது. தனி அலுவலர் நியமிக்கப்பட்டார்கள், அந்த அரசு ஆணையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசுத் துறை முக வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கியதாகச் சொல்கிறார்கள், அப்பணியைத் துரிதப்படுத்தவேண்டும். பழைய கலெக்டர் ஆபீஸ்ல நிறைய இடம் இருக்கு, இதைப் பயன்படுத்தாமல் பல அரசுக் கட்டடங்கள் இன்னும் தனியாரிடம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. கரூர், பவானி, ஈரோடு போன்ற இடங்களில் மூடப்பட்டச் சாயப் பட்டறைகளை இங்கு கொண்டுவந்திருக்கிறார்கள். மேற்கொண்டு பல நிறுவனங்கள் வர முயற்சி செய்கிறார்கள். இவை மாசுபட்ட நிறுவனங்கள் மட்டும் இல்லை, நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நிறுவனங்கள். இங்குப் பல இடங்களில் அனுமதி இல்லாமல் போர்வெல் போடப்பட்டுள்ளது" என்றார், மிகத் தெளிவாக. 

மாதவன்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன், ``கடலூர் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க என மாறிமாறி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வருகிறார்கள், ஆனால், நகருக்கு உருப்படியா எதுவும் செய்யலை. நகரில் குடி நீரில் சாக்கடை நீர் கலந்துவருகிறது, இல்லைனா உப்புநீரா வருகிறது. பொதுமக்கள் சராசரியா ஒரு குடும்பத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.30 வரை குடிநீருக்காகச் செலவுசெய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை, சிப்காட் தொழிற்சாலை போன்ற ஆலைகளால் காற்று மாசு ஏற்பட்டு சுத்தமான காற்று இல்லை. எதிர்காலத்தில் முகத்தில் மாஸ் அணிந்து, கையில் ஆக்சிஸனோடு நடக்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்கள், சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு தடவையும் நிதி ஒதுக்கிப் பணி நடக்கிறது. எந்தப் பணியும் முழுமையாக நடந்ததாகத் தெரியவில்லை.

இதில் பெரிய அளவில ஊழல் நடந்திருக்கு. கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட அமைச்சரா எம்.சி.சம்பத் இருக்கிறார். அவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க அவர் எந்த முயற்சியும் செய்யலை. மாவட்ட மக்கள் சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கு. எம்.ஆர்.ஐ. வசதி இல்லை, இரவு நேரத்தில் சிடி ஸ்கேன் எடுக்க முடியலை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகமே பல இடங்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. அங்குக் கழிவறைகள் சரிவர பராமரிக்கப்படலை. அலுவலக வளாகத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஜவான் பகதூர் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா அமைத்தல் என எதிலும் ஊழல் மயமாக உள்ளது. மொத்தத்தில் மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாகக் கடலூர் உள்ளது" என்றார், மிகத் தெளிவாக.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான எம்.சி.சம்பத், ``அப்படியெல்லாம் இல்லை. நான்  தொகுதி வளர்சிக்குத் தேவையான அனைத்தையும்  நல்ல முறையில் செய்து வருகிறேன். படிப்படியாக அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். வேண்டுமென்றே சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சொல்கின்றனர்" என்றார்.

மாவட்டத்தில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வளர்ந்துள்ளனரே தவிர, நகரம் வளரவில்லை. 

   


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close