`படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது!’ - அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள் | 'Do not stop studying!' - Rural people who have been donates Rs 3 lakh for govt school

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (26/02/2019)

கடைசி தொடர்பு:19:40 (26/02/2019)

`படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது!’ - அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

``மாணவன் நல்ல வழியில் செல்வதைத் தீர்மானிப்பது அவனது கல்விதான். எக்காரணத்தைக் கொண்டும் பாதியிலேயே நிறுத்திவிடக் கூடாது’’ என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கிராம மக்கள், அரசுப் பள்ளிக்கு 3 லட்சம் மதிப்பில் கல்விச் சீரினை ஆட்டம் பாட்டத்தோடு கொடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளிக்கு செல்லும் சீர்வரிசை

அரியலூர் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக்குக் கிராம மக்கள் சார்பில் கல்விச் சீர் வழங்கும் திருவிழா இன்று நடைபெற்றது. சாத்தமங்கலம் பேருந்து நிலையத்தில் ஒன்று சேர்ந்த கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க அரசுப் பள்ளிக்குக் கல்விச் சீரினை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பள்ளி நுழைவு வாயிலிலிருந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கல்விச் சீருடன் வந்த பொதுமக்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சீர்வரிசையுடன் செல்லும் கிராம மக்கள்

இதையடுத்து அரசுப் பள்ளிக்காகப் பொதுமக்களால் எடுத்துவந்த பீரோ, சேர், மேஜை, புத்தகங்கள், கணினி உள்ளிட்ட மூன்று லட்சம் மதிப்பிலான உபகரணங்களைப் பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர். பின்னர் நடைபெற்ற விழாவில், ``பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசை மட்டும் நம்பி இல்லாமல் பொதுமக்களாகிய எங்களால் முடிந்த கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று கிராம மக்கள் கூறினர்.

அரசுப்பள்ளிக்கு செல்லும் மக்கள்

கல்விச் சீர் வழங்கிய கிராம மக்கள் சிலரிடம் பேசினோம். ``நாங்கள் படிக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை. ஆனால், இம்மாணவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றை மாணவர்களாகிய நீங்கள் முழுமை பெற்றுப் பயனடைய வேண்டும். ஒரு மாணவன் நல்ல வழியில் செல்வதைத் தீர்மானிப்பது அவனது கல்விதான். நீங்கள் அனைவரும் நல்லவழியில் செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது என்பதற்காகவே கல்விச் சீர் வழங்கினோம். இதை மாணவ -மாணவிகள் நன்கு பயன்படுத்தி தங்களது கல்வித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ எனக் கூறினர்.


[X] Close

[X] Close