முடிவுக்கு வரும் 30 ஆண்டுக்கால கோரிக்கை - வாயலூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை! | rs 32cr check dam to be built across palar river in vayalur

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:20:00 (26/02/2019)

முடிவுக்கு வரும் 30 ஆண்டுக்கால கோரிக்கை - வாயலூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை!

கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே உள்ள வாயலூர் பகுதியில் அமைந்துள்ள பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படவுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ``வாயலூர் பகுதியில் அமைந்துள்ள பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்பது காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. நீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. தமிழக அரசின் நீர் வளத் துறை (Water Resources Department) மற்றும் பொதுப்பணி துறை மூலமாக ரூ.32.50 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்தத் தடுப்பணை கட்டுமானப் பணிகளைத் துவக்குவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. பொதுப் பணிகள் நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் நிறைவேற உள்ள இந்தத் திட்டத்துக்கான தொகையை அணுசக்தித்துறை வழங்குகிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரிக்கையில் இருந்த இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் பாலாற்றுப் படுகையில் கடல் நீர் ஊடுருவுவது தடுக்கப்படும். மேலும், மழைநீர் கடலில் கலந்து வீணாவது தடுக்கப்பட்டு கணிசமான அளவுக்குக் குடிநீர் பயன்பாட்டுக்குக் கிடைக்கும். இத்திட்டமானது பாலாற்றின் முடிவுப் பகுதியில் அமைய உள்ளது.

தடுப்பணை

1.190 கிலோமீட்டர் நீளம் உடைய இந்தத் தடுப்பணை அதிகப்படியான மழைநீர் பாலாற்றில் ஓடி கடலில் கலப்பதைத் தடுத்து நிறுத்திச் சேமிக்க உதவும். மேலும், இதன் மூலம் கூடுதலாக 1500 மில்லியன் கியூபிக் மீட்டர் நீரை இரண்டு நீர்த்தேக்கத்தின் மூலம் சேமிக்க முடியும். இதுமட்டுமின்றி 330 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் நீர் ஆதாரத்தைப் பெற்று விவசாயம் செழிக்க இந்தத் தடுப்பணை வழிவகை செய்யும். தமிழ்நாடு அரசின் நீர் வளத் துறை மற்றும் பொதுப் பணிகள் துறை ஆகியவை 2015-ம் ஆண்டில் இப்பகுதியில் அதிகபட்சமாகத் தேங்கும் தண்ணீர் அளவைக் கண்டறிந்து தடுப்பணை ஒன்றைக் கட்ட முடிவு செய்தது. நிலமட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரமுடைய இந்தத் தடுப்பணையானது கடலில் கலக்கும் நீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுக்கும். 

மேலும், பூமிக்கு அடியில் 8 மீட்டர் ஆழத்துக்கு அமைய உள்ள தடுப்புச்சுவரானது கடல் நீர் மற்றும் உப்பங்கழி நீரானது பாலாற்றுப் படுகைப் பகுதிக்கு ஊடுருவுவதைத் தடுத்து, நிலத்தடி நீர் பாழாவதைத் தடுக்கும். பழைய முறை மூலம் தடுப்பணை கட்டினால் அருகில் கடலும் உப்பங்கழியும் அமைந்திருப்பதால் அதிக அளவுக்குப் பலன் தராது. ஆனால், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள நவீன முறை தடுப்பணையானது சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் குடிநீர் மற்றும் விவசாய நீர்த் தேவைகளை போதிய அளவுக்குப் பூர்த்தி செய்யும் திறன் உடையது. இந்தத் திட்டம் மார்ச் 2020-ல் பூர்த்தி அடையும்போது இதன் மூலம் கிடைக்கும் நீர் ஆதாரமானது இப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ள மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்குத் தேவையான நீர்த் தேவைகளை மிகச்சிறப்பாகப் பூர்த்தி செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close