`மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றமாகிவிட்டது; பா.ம.க-விலிருந்து வெளியேறுகிறேன்!’ - நடிகர் ரஞ்சித் | Actor ranjith choose to outset from PMK over ADMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (26/02/2019)

கடைசி தொடர்பு:19:13 (26/02/2019)

`மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றமாகிவிட்டது; பா.ம.க-விலிருந்து வெளியேறுகிறேன்!’ - நடிகர் ரஞ்சித்

`நொடிப் பொழுதில் எனது கனவுகள் சிதைந்து போய்விட்டன. மாற்றம் முன்னேற்றம் என்று  நம்பி வந்த இளைஞர்கள் மத்தியில் மண்ணைப் போட்டுவிட்டது பா.ம.க. சிங்கம் மாதிரி இருந்த அன்புமணி கோழையாகிவிட்டார்' என்றபடி ஆதங்கத்தோடு பா.ம.க-விலிருந்து வெளியேறியுள்ளார் பா.ம.கவின் மாநில துணைத்தலைவராக இருந்த நடிகர் ரஞ்சித்.

நடிகர் ரஞ்சித் பா.ம.க

இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஞ்சித், ``கொள்கை  அடிப்படையில் நல்ல சிந்தனைகள் கொண்ட கட்சி என்ற எண்ணத்திலேயே நான் பா.ம.க-வில் இணைந்தேன். ராமதாஸ் எனக்கு மாநில துணைத் தலைவர் பதவியும் கொடுத்தார். தினமும் சட்டை என்பதைப் போல, கொள்கைளை மாற்றக் கூடாது. நொடிப் பொழுதில் எனது கனவுகள் சிதைந்து போய்விட்டன. தொடர்ந்து அ.தி.மு.க மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தார் அன்புமணி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார். ஆனால், இப்போது  யாரைக் எதிர்த்து போராடுகிறோமோ அவர்கள் காலடியில் சரணடைந்து கூட்டணி வைத்தால் எப்படி மக்களைச் சந்திப்பது. என்ன சொல்லி வாக்குக் கேட்பது என்று ஒரு நிமிடமாவது யோசித்துப் பார்க்க வேண்டாமா.

நடிகர் ரஞ்சித் பா.ம.க

மக்கள் தினமும் பிரச்னைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். குட்கா வழக்கு இன்னும் நிலுவலையில் உள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை. மாற்றம் முன்னேற்றம் என்று  நம்பி வந்த இளைஞர்கள் மத்தியில் மண்ணைப் போட்டுவிட்டது பா.ம.க .10 அம்ச கோரிக்கை என்பது இந்த வருடத்தின் மிகச்சிறந்த காமெடி. அது முட்டாள் தனமான கோரிக்கைகள். இந்தக் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் வரை இருப்பார்கள். பின்பு கூட்டணியிலிருந்து விலகி மாற்றம் முன்னேற்றம் என்பார்கள். ஆகவே, இந்தக் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன். பா.ம.கவிலிருந்து  வெளியேறியதால் நிம்மதியாக உணர்கிறேன்.

சிங்கம் மாதிரி இருந்த அன்புமணி பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று கோழையைப் போல பேசினார். அன்புமணியால் பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்களால் அ.தி.மு.கவினருடன் ஒன்று சேர்ந்து ஓட்டுக் கேட்க முடியாது. அ.தி.மு.கவை வீழ்த்தும் வாள் என்று அன்புமணியை நினத்தேன். ஆனால், அந்த வாளையே அ.தி.மு.க-விடம் அடகு வைத்து விட்டார்கள். அரசியல் நாடகம் நடத்தும் போலிகளைக் கண்டறிந்து களை எடுக்க வேண்டும்.

அன்புமணி நடிகர் ரஞ்சித் பா.ம.க கூட்டணி

மாற்றம், முன்னேற்றம் ஏமாற்றமாகிவிட்டது. மக்கள் 1000, 2000 ரூபாய்க்காக  ஓட்டை விற்காதீர்கள். ஒரு தொகுதிக்கு 90 கோடி ஒதுக்கிறார்கள். பா.ம.க தொண்டர்களே பா.ம.க-வுக்க்கு வேலை செய்ய மாட்டார்கள். நல்ல தலைமையும், ஆளுமையும் கொண்ட தலைமையுடன்  நான் இணைவேன். திருடர்களுடன் சேர்ந்து கூட்டணி வைத்தால் தற்போது நன்றாக இருக்கும். பின்னால் வருத்தப்படுவார்கள்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close