`பயிர்க் காப்பீட்டில் முறைகேடு நடந்திருக்கு!’ - தஞ்சை அருகே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் | Farmer protest near tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (26/02/2019)

கடைசி தொடர்பு:21:41 (26/02/2019)

`பயிர்க் காப்பீட்டில் முறைகேடு நடந்திருக்கு!’ - தஞ்சை அருகே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

தஞ்சை மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரியும் இன்று தஞ்சாவூர் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.   

விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``இயற்கை சீற்றங்களால் தங்களோட பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இழப்பீடு தொகை கிடைக்கலை. இதுல நிறைய முறைகேடுகள் நடந்திருக்கு. 2016-17-ம் ஆண்டுக்கும் 2017-18-ம் ஆண்டுக்கும் சேர்த்து நியூ இந்தியா இன்ஷுரன்ஸ் நிறுவனம் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு 138 கோடி ரூபாய் கொடுத்ததாகச் சொல்றாங்க. அந்தப் பணம் எங்க போச்சு? கூட்டுறவு வங்கிகள்லதான் நாங்க பிரிமியம் கட்டியிருந்தோம். இன்ஷுரன்ஸ் கம்பெனி கூட்டுறவுத்துறைக்கிட்ட பணத்தைக் கொடுத்ததாக சொல்றாங்க. ஆனால், கூட்டுறவு வங்களில இழப்பீடு பணம் வரலைனு சொல்றாங்க. தஞ்சை மாவட்டத்துல ஒரு சில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிள்ல மட்டும் அதுவும்கூட ஒரு சில விவசாயிகளுக்கு மிகவும் குறைவான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கு. 80 சதவிகிதம் பயிர் பாதிச்ச விவசாயிகளுக்குக்கூட வெறும் 10 சதவிகிதம்தான் இழப்பீட்டுத் தொகை கொடுத்திருக்காங்க.

இதுவும்கூட ஒரு கண் துடைப்புக்காகத்தான் கொடுத்திருக்காங்க. இன்ஷுரன்ஸ் நிறுவனம் கொடுத்துவிட்டதாகச் சொல்லக்கூடிய 138 கோடி ரூபாய் எந்தெந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதுங்கிறதை முகவரியுடன் வெளியிடணும். இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் ஆய்வின்படி பயிர் பாதிப்பின் அளவையும் கிராமம் வாரியாகத் துல்லியமாக வெளியிடணும். விவசாயிகளின் பணத்தை இன்ஷுரன்ஸ் நிறுவனமும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் சேர்ந்து முறைகேடு செஞ்சுருக்காங்க. சி.பி.ஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் வந்துசேரும்” என்றார்.   


[X] Close

[X] Close