உறவினரின் காதலிக்கு பாலியல் வன்கொடுமை! - கடலூர் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை | Cuddalore Court sentenced 20 years to sex offender

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (26/02/2019)

உறவினரின் காதலிக்கு பாலியல் வன்கொடுமை! - கடலூர் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

கடலூரில் உறவினர் காதலியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

விருத்தாசலம் அருகே உள்ள பெரியகோட்டிமூளைக் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (26). இவருடைய உறவினர் 
கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திரன். இருவரும் திருப்பூரில் பனியின் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 
விஜயேந்திரன் சொந்த ஊரில் 16 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஊருக்கு வந்த சத்தியமூர்த்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி உறவினர் விஜயேந்திரன் காதலியிடம், 
விஜயேந்திரன் கோவையில் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரைப் பார்க்க வரும்படி 
அழைத்துள்ளார். அதற்கு அந்தப் பெண் வருவதற்கு மறுப்பு தெரிவித்தார். `நீ வரவில்லை என்றால் காவல்துறையில் வழக்கு 
பதிவாகிவிடும்’ என  மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் சத்தியமூர்த்தியுடன் கோவைக்குச் சென்றுள்ளார். 

கடலூர்

ஆனால், சத்தியமூர்த்தி அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், திருப்பூருக்கு  அழைத்துச் சென்று அங்கு வைத்து ஒரு வாரம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்தப் பெண்ணின் பெற்றோர் தன் மகளைக் காணவில்லை என சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஸ்ரீமுஷ்ணம் பேருந்து நிலையத்தில் சத்தியமூர்த்தி அந்தப் பெண்ணுடன் பேருந்தில் இருந்து இறங்கி உள்ளார். அங்கு நின்றிருந்த போலீஸார்  சத்தியமூர்த்தியை
பிடித்தனர். அதன் பின்பு  அந்தப் பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது 
செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை இன்று  விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், 
உறவினரின் காதலியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சத்தியமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ 15,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பு  அளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு  வழக்கறிஞராக  செல்வப்பிரியா ஆஜரானார்.


[X] Close

[X] Close