‘ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட செம்மரம்!’ -குடியாத்தத்தில் மடக்கிப் பிடித்த வனத்துறை | The wood were seized by the Forest Department

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (27/02/2019)

கடைசி தொடர்பு:08:07 (27/02/2019)

‘ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட செம்மரம்!’ -குடியாத்தத்தில் மடக்கிப் பிடித்த வனத்துறை

ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட செம்மரக் கட்டைகளை, குடியாத்தம் அருகே வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய செம்மரக் கடத்தல் கும்பலைப் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

காரில் கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகள்

ஆந்திராவிலிருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் சைனகுண்டாவில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி வழியாக தமிழகத்திற்குள் செம்மரக் கட்டைகள் கடத்திவரப்படுகிறது. செம்மரக் கடத்தலை தடுப்பதற்காக, சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வழக்கம்போல் 26-ம் தேதி காலை வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

செம்மரம் கடத்திவரப்பட்ட கார்

அப்போது, ஆந்திராவிலிருந்து காரில் வந்தவர்கள், வனத்துறையினரைக் கண்டதும், மீண்டும் ஆந்திரப் பகுதியை நோக்கி காரை வேகமாகத் திருப்பினர். வனத்துறையினர், தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள கொண்டம்மா கோயில் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்த இருவர் தப்பி ஓடிவிட்டனர். ஆந்திர பதிவெண் கொண்ட அந்தக் காரை சோதனைசெய்ததில், சுமார் 300 கிலோ எடைகொண்ட 8 செம்மரக் கட்டைகள் இருந்தன.

இவற்றின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், முதுகில் மாட்டக்கூடிய 6 பைகள் காருக்குள் இருந்தன. காரிலிருந்து இருவர் மட்டுமே ஓடியதால், மற்றவர்கள் பேருந்து மூலம் தமிழகத்திற்குள் ஊடுருவியிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, காருடன் செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கடத்தல் கும்பலைத் தேடிவருகின்றனர்.


[X] Close

[X] Close