‘மோடியின் படத்தை பேனரில் போடாதது ஏன்?’ -அமைச்சர்களிடம் வாக்குவாதம் செய்த பா.ஜ.க பிரமுகர்கள் | Why Modi's image not in banner? - BJP leaders who dispute ministers

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (27/02/2019)

கடைசி தொடர்பு:08:45 (27/02/2019)

‘மோடியின் படத்தை பேனரில் போடாதது ஏன்?’ -அமைச்சர்களிடம் வாக்குவாதம் செய்த பா.ஜ.க பிரமுகர்கள்

வேலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மோடியின் படம், பெயர் பேனரில் இடம்பெறாததால் ஆத்திரமடைந்த பா.ஜ.க-வினர், அமைச்சர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர்கள்

வேலூர் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ரூ.1000 கோடி திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டு விழா, சத்துவாச்சாரியில் உள்ள பி.எம்.பி தனலட்சுமி மஹாலில் 26 -ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். திருவண்ணாமலை எம்.பி வனரோஜா, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சு.ரவி, லோகநாதன் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோஃபர் கபில் கலந்துகொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில், அமைச்சர் நிலோஃபர் கபில் பேசிக்கொண்டிருந்தபோது, பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் திடீரென மேடையில் ஏறினர். 

‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசும், மாநில அரசும் பாதிப்பாதி நிதி ஒதுக்கீடு செய்கின்றன. ஆனால் விழாவில், முன்னால் முதல்வர் ஜெயலலிதா, இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படங்களை மட்டுமே வைத்திருக்கிறீர்கள். பிரதமர் மோடியின் படத்தை வைக்காதது ஏன்? விழா அழைப்பிதழிலும் மோடியின் பெயர் இடம்பெறவில்லை. மத்திய பா.ஜ.க அரசின் திட்டம் மட்டும் வேண்டும், நிதி ஒதுக்கும் பிரதமர் மோடியை ஏற்க மாட்டீர்களா?’’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். ‘‘இதுபோன்ற பிரச்னை இனி வராமல் பார்த்துக்கொள்கிறோம்’’ என்று கூறி, பா.ஜ.க பிரமுகர்களை அமைச்சர் வீரமணியும், கலெக்டர் ராமனும் சமரசம் செய்தனர். 

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், அமைச்சர்களிடம் பா.ஜ.க-வினர் தகராறில் ஈடுபட்டதைப் பார்த்து, மேடையில் அமர்ந்திருந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிரித்துக்கொண்டிருந்தனர். இந்தப் பிரச்னையால், நிகழ்ச்சியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.


 


[X] Close

[X] Close