``காங்கிரஸ் தலைமையில் கூட்டணி; ஆனால், பிரதமர் வேட்பாளர்?” - கலகலத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ | Minister kadambur raju on DMK - Congress political alliance

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (27/02/2019)

கடைசி தொடர்பு:09:45 (27/02/2019)

``காங்கிரஸ் தலைமையில் கூட்டணி; ஆனால், பிரதமர் வேட்பாளர்?” - கலகலத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ

``பிரதமர் யார் என்பதை முன்மொழிந்து தேர்தலைச் சந்திப்பது அ.தி.மு.க கூட்டணிதான். ஆனால், பிரதமர் யார் என்றுகூட தெளிவுபடுத்த முடியாத நிலையில் தி.மு.க-வும் காங்கிரஸும் உள்ளது” என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் சாலைப்பணிகள், குடிநீர் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”அ.தி.மு.க-வைப் பொறுத்த வரை தேர்தல் அறிவித்த உடன்தான் கூட்டணி என்பது முழு வடிவம் பெறும். இதற்கு, கால அவகாசம் உள்ளது. தி.மு.க-வினர், கடந்த ஆறு மாதங்களாக அந்த வேலையைத்தான் செய்துவருகின்றனர். எங்களுக்கு அந்தப் பணி அல்ல, மக்கள் பணிதான் முக்கியம். தேர்தல் அறிவிப்பு வரும்போது நாங்கள் சரியான முடிவை எடுப்போம். நல்ல கூட்டணி அமைப்போம் என்று கூறினோம்.  தற்போது, மகத்தான கூட்டணி அமைத்துள்ளோம்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாட்டின் பிரதமர் யார் என்று முன்மொழிந்து தேர்தலை சந்திக்கின்ற கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. தமிழகத்தில் நாங்கள் அமைத்துள்ள கூட்டணியால், இந்தியாவில் அடுத்த பிரதமர் மோடிதான். பா.ஜ.க தலைமையில்தான் அடுத்த ஆட்சி என கொள்கை அறிவிப்போடு செய்கிறோம். ஆனால், பிரதமர் யார் என்றுகூட தெளிவுபடுத்த முடியாத நிலையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்றாலும்கூட, ராகுல் காந்திதான் பிரதமர் என்று முன்மொழிய அவர்களால் முடியவில்லை.  பிரதமர் யார் என்று தேர்தலுக்குப் பின்னர் முடிவு செய்யலாம் என குழப்பமான கூட்டணியை அவர்கள் அமைத்துள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் யார் என்று முன்மொழிந்து தேர்தலைச் சந்திக்கின்ற கூட்டணிதான் இதுவரை வெற்றிபெற்றுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்துக்குள் வருவதாக உள்ளது. அப்போது, தே.மு.தி.க மட்டுமல்ல இன்னும் பல்வேறு கட்சிகள் எங்களுடன் இணைகின்ற சூழ்நிலை உள்ளது. அதுவரை அனைத்து கட்சிகளும் சந்திப்பார்கள். அது வழக்கமான நடைமுறைதான். இறுதி வடிவம் பெறும்போதுதான் யார் யாருடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என்ற நிலை தெளிவாகும்.

தி.மு.க-வின் கிராமசபை கூட்டங்களைப் பார்த்து அ.தி.மு.க ஒன்றும் ஆத்திரம் அடையவில்லை. ஸ்டாலினுக்கு காலம் கடந்த ஞானோதயம் பிறந்துள்ளது. அவர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எனச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்திசெய்கின்ற  இடத்தில் இருக்கும்போது செல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்து மக்களை ஏமாற்றுவதற்காகச் செல்கிறார். ஆனால், நாங்கள் ஒவ்வொரு மண்டலமாக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிக்கும்  கீழ் மூன்று ஒன்றியத்தை பிரித்துக்கொடுத்து, அங்குள்ள அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்கும் இடத்தில் எங்களிடம் அரசு உள்ளது.

ஸ்டாலின், கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி, ஆறு மாதங்களாகிறது. ஆறு மாதங்களாக மனுக்களை வாங்கி இருக்கிறார்களே தவிர, எப்படித் தீர்வு காண முடியும்? அவர்  செய்வது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. தற்போதும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து 3 வருடங்களாகிவிட்டன. மூன்று வருடங்களாகச் செய்யாத வேலையை இன்று தேர்தல் வருவதற்காகச் செய்கிறார்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close