``கருணாநிதியுடன் தினகரன் போட்ட ரகசிய ஒப்பந்தம்!" -அதிரவைத்த அமைச்சர் தங்கமணி | Minister Thangamani slams TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (27/02/2019)

கடைசி தொடர்பு:10:38 (27/02/2019)

``கருணாநிதியுடன் தினகரன் போட்ட ரகசிய ஒப்பந்தம்!" -அதிரவைத்த அமைச்சர் தங்கமணி

``முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே ஏமாற்றி,  1000 கோடியில் ஹோட்டல் வாங்கியவர்தான் இந்த தினகரன். கருணாநிதியுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டார்” எனப் பேசி அதிரவைத்திருக்கிறார் அமைச்சர் தங்கமணி.

தங்கமணி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் முசிறியில்  அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ் தலைமையில், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் எம்பி-யுமான ரத்தினவேல் முன்னிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி, அண்ணாவி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ் தங்கவேலு மற்றும் ரத்தினவேல் ஆகியோர் சகிதமாக, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, சைக்கிள், தையல் இயந்திரம், சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மேடையில் வழங்கினார்.

இறுதியாக பேசத் தொடங்கிய அமைச்சர் தங்கமணி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாள்களும்  அவரைப் பார்க்க சசிகலா குடும்பம் யாரையும் அனுமதிக்கவில்லை. எந்த வகையிலும் ஜெயலலிதாவைப் பற்றி பேசத் தகுதி இல்லாதவர்கள்  இந்த ஆட்சியை அகற்றுவோம் என்கிறார்கள். சசிகலாவின் குடும்பம் செய்த சதியால்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நம்மிடம் இல்லை. இந்த ஆட்சியை அகற்ற பல்வேறு வழிகளில் எதிரிகளுடன் கைகோர்த்து முயற்சிசெய்து வருகிறார்கள். ஆனாலும் அ.தி.மு.க ஆட்சி தொடர்கிறது என்றால், கழகத்தை உயிரினும் மேலாக மதிக்கும் ஒன்றரைக் கோடி தொண்டர்கள்தான் காரணம்.

தங்கமணி

தமிழக முதல்வராக இருந்தபோது, கருணாநிதி ஒரு திட்டம் போட்டால் அதன்மூலம் தனது குடும்பத்துக்கு என்ன வருமானம் என்று பார்ப்பார். அந்த வகையில் அவர் ஆட்சியில்  இருந்தபோது கலர் டி.வி இலவசமாக வழங்கினார். இதன்மூலம் அவரது குடும்பத்துக்கு மாதம் ரூபாய் 150 கோடி கேபிள் டி.வி மூலம் வருமானம் கிடைத்தது.

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில், அவருக்கே தெரியாமல் லண்டனில் ஆயிரம் கோடி மதிப்பில்  ஹோட்டல் வாங்கியவர் டி.டி.வி.தினகரன். இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட தி.மு.க-வினர், ஜெயலலிதா மீதும் தினகரன் மீதும் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கிலிருந்து விடுபட, கருணாநிதியிடம் ரகசிய ஒப்பந்தம் போட்டவர்தான் தினகரன். இதனை அறிந்த ஜெயலலிதா, கட்சியிலிருந்து தினகரனை ஒதுக்கிவைத்தார். அதையடுத்து, புதுச்சேரியில் தோட்டத்துடன் வீடு வாங்கி பத்தாண்டுகள் அங்கேயே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். இப்போது எங்களைத் துரோகி என்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஒருபுறம் எதிரி ஸ்டாலின் நிற்கிறார் என்றால், மறுபுறம் துரோகி தினகரன் உள்ளார். இவர்களை வீழ்த்தி வெற்றிபெற தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close