`கலெக்டர் வந்தாகணும்; இல்லேனா, சி.எம்.முக்கும் பிரஷர் கொடுப்பேன்!' - சப்-கலெக்டரை மிரட்டிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ | a ruling party executive warns sub-collector during his duty

வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (27/02/2019)

கடைசி தொடர்பு:10:56 (27/02/2019)

`கலெக்டர் வந்தாகணும்; இல்லேனா, சி.எம்.முக்கும் பிரஷர் கொடுப்பேன்!' - சப்-கலெக்டரை மிரட்டிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைச் செய்த ஐஏஎஸ் அதிகாரியை அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசத்துடன் பேசி பணியைச் செய்யவிடாமல் தடுத்தபோது, பாதுகாப்புக்காக உடன் சென்றிருந்த காவல் துறை டிஎஸ்பி வேடிக்கைபார்த்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

சப்-கலெக்டரை மிரட்டிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கிறது, ரவணசமுத்திரம் கிராமம். இந்தப் பகுதியில், பொதுபணித்துறைக்குச் சொந்தமான வாய்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். 12 அடி அகலத்துக்கு வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொடுக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தை விவசாயிகள் வலியுறுத்தினர். 

அதனால், வாய்க்காலில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டியது. அதற்காக, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ஆகாஷ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அரசு அலுவலர்களின் பாதுகாப்புக்காக அம்பாசமுத்திரம் சரக துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அதிகாரியை மிரட்டும் அரசியல்வாதி

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது அங்கு வந்த ஆலங்குளம் சட்ட மன்றத் தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., பி.ஜி.ராஜேந்திரன், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்தார். சப்-கலெக்டர் ஆகாஷைப் பார்த்து, ’’நீங்க எப்படி ஆக்கிரமிப்பை அகற்றலாம்? நீங்க இங்கே 3 மாதமோ 6 மாசமோ இருப்பீங்க. அப்புறமா போயிடுவீங்க. நாங்க இங்கேயே இருப்போம்.            6 அடிக்கு மேல ஆக்கிரமிப்பை எடுத்தால், உங்க பேரை எழுதி வச்சுட்டு செத்திருவோம். இப்போவே இங்க ரெண்டு பேரு சாவாங்க.

சட்டப்படி செய்யுறதையெல்லாம் உங்க கேரளாவுல போயி செய்யுங்க. இது தமிழ்நாடு. இங்கே வந்து பூச்சாண்டி காட்டுறீங்களா? ஆக்கிரமைப்பை எடுத்தால் என்னுடைய பிணத்தைத்தான் எடுக்கணும். ஜேசிபி-யை தூர எடுத்துட்டுப்போங்க. இப்ப கலெக்டர் இங்க வரணும். இல்லேனா, பஸ் மறியல் செஞ்சு சி.எம் வரைக்கும் பிரஷர் கொடுப்பேன். எங்களை பைத்தியக்காரன்னு நினைச்சீங்களா?’’ என மிரட்டியபடி ஜே.சி.பி-யை அப்புறப்படுத்தினார். 

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பை அகற்றும் செயலைச் செய்த ஐஏஎஸ் அதிகாரியை அரசியல்வாதி ஒருவர், பொதுமக்கள் மற்றும் சகஅதிகாரிகள் முன்னிலையிலேயே ஒருமையில் திட்டியதுடன் எச்சரிக்கை விடுத்த சம்பவம், சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த அம்பாசமுத்திரம் டிஎஸ்பி-யான ஜாகிர் உசேன், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் புகார் எழுந்துள்ளது. 

ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆக்ரோஷமாகப் பேசியபோது, அவரைச் சமாதானப்படுத்தும் வகையில் டிஎஸ்பி பேசியதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், சப்-கலெக்டரை மிரட்டியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவோ அல்லது சம்பவ இடத்தில் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவோ டி.எஸ்.பி-யான ஜாகிர் உசேன் முன்வரவில்லை என, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் டி.எஸ்.பி ஜாகிர் உசேன் நடந்துகொண்ட செயல்குறித்து துறைரீதியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.   


[X] Close

[X] Close