`போகப் போக பா.ம.கவினர் இப்படியும் சொல்வார்கள்!'- கே.பாலகிருஷ்ணன் கிண்டல் | CPM K.Balakrishnan slams PMK

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (27/02/2019)

கடைசி தொடர்பு:11:55 (27/02/2019)

`போகப் போக பா.ம.கவினர் இப்படியும் சொல்வார்கள்!'- கே.பாலகிருஷ்ணன் கிண்டல்

``பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருப்பது தன் குடும்ப நலனுக்காக வைத்துள்ள கூட்டணி'' என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

கே பாலகிருஷ்ணன்

சிதம்பரத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ``தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி. ம.தி.மு.க, வி.சி.க கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. இந்தக் கூட்டணி பலமான கூட்டணி. இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி தமிழக நலனைக் காவு கொடுத்து வைத்துள்ள கூட்டணியாகும். இது எந்த விதத்தில் நியாயம். மோடியை எதிர்த்து அ.தி.மு.க பலமுறை நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினார்கள். பிரதமர் மோடி தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இதுவரை தமிழகத்தைப் புறக்ணித்துதான் வந்துள்ளார். ஆனால் ரூ.3,000 கோடியில் குஜராத்தில் படேலுக்கு சிலை வைத்த மோடி தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். தமிழகத்தில் இல்லாத திட்டங்களுக்கு பணம் ஒதுக்கீடு செய்ததாக அமித் ஷா கூறுகிறார்.

அ.தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஆளுநரிடம் மனு கொடுத்த பா.ம.க, எப்படி அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தது. தி.மு.க கூட்டணியில் தேர்தலுக்காக நாங்கள் சேரவில்லை. பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்கு தி.மு.கவுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளோம். முகிலன் காணாமல் போய் 15 நாளாகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை. மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களைச் சந்தித்துள்ளார். அப்பொழுது நாங்கள் பா.ஜ.கவுக்கு எதிராக பலமாக ஒரு கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.கவுடன் கூட்டணி முடிவு செய்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. அதனால் இதைப்பற்றிப் பேச வேண்டாம், நாம் எப்பொழுதும் போல் நண்பர்களாக இருப்போம் என பிரகாஷ்காரத் கூறியுள்ளார். தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தால் வரவேற்போம்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நீட் தேர்வுக்கு விளக்குக் கேட்டு மசோதா நிறைவேற்றி அதை இதுவரை ஜனாதிபதிக்குத் தமிழக அரசு அனுப்பவில்லை. இந்த நிலையில் ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்பாத நிலையில் எப்படி நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும். மேலும் பா.ம.க, அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். பா.ஜ.க தலைவர் அமித் ஷா தமிழகத்துக்குப் பல்வேறு திட்டங்களுக்கு 5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்டப்புளுகு புளுகியுள்ளார். தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மையாகும். தமிழக பட்ஜெட்டை விமர்சனம் செய்த பா.ம.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி 
சேர்ந்துள்ளது.

போகப் போகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் புனிதமானவர்கள் என பா.ம.கவினர் சொல்லக்கூடும். ஜெயலலிதா உயிரோடு இருந்தால் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணி இருந்திருக்காது. அ.தி.மு.கவினர் பா.ஜ.க பா.ம.க கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகமாகும். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருப்பது தன் குடும்ப நலனுக்காக வைத்துள்ள கூட்டணியாகும். நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்ற இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். வரும் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்'' என்று கூறினார்.


[X] Close

[X] Close