தூத்துக்குடியில் களம் இறங்குகிறாரா தமிழிசை? -விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு | Tamilisai competing in Thoothukudi?

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (27/02/2019)

கடைசி தொடர்பு:11:39 (27/02/2019)

தூத்துக்குடியில் களம் இறங்குகிறாரா தமிழிசை? -விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை களமிறங்க உள்ளதாகவும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழிசை

தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க-வுடன் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்தக் கூட்டணியில் இதுவரை பா.ம.க மட்டும் இணைந்துள்ளது. இன்னும் சில கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள நிலையில், பா.ஜ.க-வுக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே கூட்டணியில் முடிவாகியிருக்கிறது. இந்த ஐந்து தொகுதிகளிலுமே கட்சியின் முக்கிய பிரமுகர்களை நிறுத்தவுள்ளது பா.ஜ.க. அ.தி.மு.கவுடன் இணைந்து எப்படியும் சில தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறது பா.ஜ.க. இந்நிலையில், ``பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட விரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், அந்தத் தொகுதியை விட்டுத்தரவில்லை.

தமிழிசை

இதனால் அ.தி.மு.க வேறு தொகுதியைக் கேட்குமாறு தமிழிசையிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பா.ஜ.க தலைமையிடம் கலந்தாலோசித்தும், மேலிட உத்தரவின்படியும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் தமிழிசை'' என்கிறது பா.ஜ.க வட்டாரம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடியில் போட்டியிட இருப்பதாகவும் தெரியவருகிறது. இதற்கான வேலைகளை இப்போதே இரண்டு கூட்டணிகளும் செய்யத்தொடங்கிவிட்டன.


[X] Close

[X] Close