பொறியியல் கவுன்சலிங்கை இனி அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது... பின்னணி என்ன?! | Anna University may not conduct engineering counselling

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (27/02/2019)

கடைசி தொடர்பு:12:06 (27/02/2019)

பொறியியல் கவுன்சலிங்கை இனி அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது... பின்னணி என்ன?!

பொறியியல் கவுன்சலிங்கை இனி அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது... பின்னணி என்ன?!

கடந்த 22 வருடங்களாகப் பொறியியல் கலந்தாய்வை நடத்தி வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். உயர்கல்வித் துறைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்குமான மோதலால் இந்த ஆண்டு முதல், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது  எனச் செய்தி வெளியாகி உள்ளது.  

 

அண்ணா பல்கலை உயர்கல்வித் துறை

ஒவ்வோர் ஆண்டும் 12 தேர்வு முடிவு வெளியானவுடன், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். இந்தக் கலந்தாய்வின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் மாணவர்கள் சேர்ந்து வந்தனர். கடந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் 42 பொறியியல் கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்தச் சூழலில், இனி பொறியியல் கலந்தாய்வை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது என்று தெரியவந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், உயர்கல்வித் துறை அலுவலகத்துக்கான மோதல் போக்கே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாகனங்களைப் பயன்படுத்தி வந்தனர். இதற்கு எரிபொருள் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்க முடியாது என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தின் வாகனங்களை உயர்கல்வித் துறையின் பயன்பாட்டுக்கு இனி வரும் காலங்களில் வழங்க முடியாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் உயர்கல்வித் துறைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. 

அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சுரப்பாஇதுவரை, உயர்கல்வித் துறை செயலாளர், பொறியியல் சேர்க்கைக்கான குழுவின் உறுப்பினராக மட்டும் இருந்து வந்துள்ளார். இதை மாற்றி பொறியியல் படிப்புக்கான சேர்க்கையில் முழு அதிகாரம் செலுத்தும் வகையில், உயர்கல்வித் துறை செயலாளரே பொறியியல் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார் என்று விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். இதை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் குழுவின் தலைவராக உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் கவனத்துக்குத் தெரிவிக்காமலேயே மாற்றியுள்ளனர். 

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா, பொறியியல் சேர்க்கைக்கான குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதன்மூலம், பொறியியல் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகம் இனி எந்தவிதமான பணியும் செய்யாது எனத் தெரியவந்துள்ளது. எனவே, கடந்த 22 வருடங்களாக,  எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கலந்தாய்வை நடத்தி வந்தது முடிவுக்கு வந்திருக்கிறது. 

பொறியியல் கலந்தாய்வு சேர்க்கைக்கான உயர்மட்ட குழு 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவில், ஏதேனும் மாற்றம் செய்தால் அதைக் குழுவில் உள்ள துணைவேந்தரின் ஒப்புதலுடன் மேற்கொள்ள வேண்டும். ஆனால், துணைவேந்தருக்கே தெரியாமல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது உயர்கல்வித் துறை.  இதனால், இனியும் பொறியியல் சேர்க்கைக்கான குழுவின் தலைவர் பதவியில் இருப்பது முறையல்ல என்று கருதி, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தலைவர் பதவியிலிருந்து சுரப்பா விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை அவர் உயர்கல்வித் துறை செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.

தற்போது, துணைவேந்தர் தலைவர் பதவியிலிருந்து விலகி இருப்பதால், இனி துணைத்தலைவராக உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநர் தலைமையில் குழு செயல்படும். இனி, பொறியியல் கலந்தாய்வைத் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் எனத் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககத்துக்கு, இதுவரை எந்தவிதமான கலந்தாய்வையும் நடத்திய அனுபவம் இல்லாததால், இன்னும் நான்கு மாதத்தில் எவ்வாறு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், உயர்கல்வித் துறைக்குமான மோதலில், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய மூன்று சிண்டிகேட் கூட்டங்களிலும் உயர்கல்வித் துறை செயலாளர் கலந்துகொள்ளாமல் இருந்துவந்துள்ளார். பொறியியல் கல்வியில் மாற்றங்கள் செய்வது குறித்த சிண்டிக்கேட் தீர்மானங்கள் முடங்கியே உள்ளன. 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close