`என் கணவர் தினமும் காலையிலேயே மது குடிக்கிறார்!'- அரசுக்கு எதிராக அதிகாலையில் களமிறங்கிய பெண் | A women Protest against illegal tasmac liquor sale at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (27/02/2019)

கடைசி தொடர்பு:13:45 (27/02/2019)

`என் கணவர் தினமும் காலையிலேயே மது குடிக்கிறார்!'- அரசுக்கு எதிராக அதிகாலையில் களமிறங்கிய பெண்

திருப்பூரில் தினந்தோறும் அதிகாலை முதலே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதைக் கண்டித்து பெண் ஒருவர் டாஸ்மாக் கடை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம் நடத்திய திருப்பூர் பெண்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பாக இன்று அதிகாலை பெண் ஒருவர் தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். கவிதா என்ற அப்பெண், அதேபகுதியில் வசித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் தினந்தோறும் சட்டவிரோதமாக அதிகாலை 5 மணி முதலே மதுபான விற்பனை நடைபெறுவதால், தன்னுடைய கணவர் தினமும் காலையிலேயே மது அருந்திவிடுகிறார். இதனால் அவர் ஒழுங்காக வேலைக்கும் செல்வதில்லை. பனியன் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்துப் பிழைப்பு நடத்தி வரும் எங்களது குடும்பம் தற்போது வறுமையில் வாடுகிறது.

இதுபோன்ற டாஸ்மாக் மதுபான கடைகளால், திருப்பூரில் எங்களைப் போன்றே பலரது குடும்பங்களும் துன்பத்தில் தவிக்கின்றன என்றுகூறி தன் கையில் ஒரு கத்தியுடன் டாஸ்மாக் கடை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பெண் ஒருவர் கத்தியுடன் டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் பரவியதும், அவரைக் காண பொதுமக்கள் பலரும் அப்பகுதியில் குவிந்தனர். சிலர் அப்பெண்ணுடன் இணைந்து டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்தவும் களமிறங்கினர். பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று அங்கே சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பெண் கவிதாவையும் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதிகாலையிலேயே பெண் ஒருவர் தனியாக டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close