`உளவுத்துறை ரிப்போர்ட் இப்போது எங்களுக்கு சாதகம்!'- தமிழிசை பேட்டி | Tamilisai praised modi and admk, pmk parties

வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (27/02/2019)

கடைசி தொடர்பு:12:57 (27/02/2019)

`உளவுத்துறை ரிப்போர்ட் இப்போது எங்களுக்கு சாதகம்!'- தமிழிசை பேட்டி

சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்குபெற பிரதமர் மோடி வரும் மார்ச் 6-ம் தேதி சென்னை வருவதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

தமிழிசை


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், ``நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழகத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். மார்ச் 1-ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். இதனையடுத்து மார்ச் 6-ம் தேதி சென்னை வருகிறார். பொதுக்கூட்டம் மிகப் பிரமாண்டமாக நடக்கும். தமிழகத்தில் பிரதமர் மோடியின் வருகை ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப்பெரிய கூட்டணி அமைந்த பின்னர் முதன்முறையாக தமிழகம் வருகிறார் மோடி. அவரின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க - பா.ம.க இடம்பெற்றிருக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

மோடியின் ஆட்சியில் புல்லட் ரயில் விடப்பட்டிருப்பது நம் அனைவருக்குமே தெரியும். அதுபோன்று சென்னை டு டெல்லி அரசியல் எக்ஸ்பிரஸ் மிக வேகமாகவே சென்றுகொண்டிருக்கிறது. வெற்றிகரமாகவும் சென்றுகொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தினார். அது நடத்தி முடித்ததுமே அவருக்கு யார் அடுத்து ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்பது தெரிந்து விட்டதாம். அவரைப் பொறுத்தவரையில் தேர்தல், தேர்தல் கணிப்புகள் எதுவுமே வேண்டாம். சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் அவருக்குத் தெரிந்துவிட்டதாம். இது வேடிக்கையானது. நாங்கள் கூட்டணி அறிவித்தவுடன் தேர்தல் கணிப்புகள் எங்களுக்குச் சாதகமாகவே உள்ளன.

அதிமுக

நாங்கள் கூட்டணி அறிவிப்பதற்கு முன்புவரை 40 இடங்களிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என்று சொல்லிக்கொண்டிருந்த உளவுதுறை ரிப்போர்ட்படி, தற்போது 22 இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம் என்கிறது. ஆக நாங்கள் களத்தில் இறங்கினால் அந்த 40 இடங்களும் எங்களுக்குதான். 40 இடங்களிலுமே எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளது என்பதுதான் உண்மை. ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்திவிட்டு அடுத்ததாக யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று சொல்வது வேடிக்கையானது.

தமிழகத்தில் கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். சில கட்சிகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்தது. நாங்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே மரியாதையைக் கொடுக்கிறோம். பா.ஜ.க தேசிய கட்சியாக இருந்தாலும் இம்முறை தேர்தலை எதிர்கொள்ள சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. கூட்டணியில் எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம்தான் பெரிது. தே.மு.தி.கவுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கு வந்தாலும் உரிய மரியாதை கொடுக்கப்படும்’’ என்று பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close