5 ஆண்டுகளாக வலியால் துடித்த பெண்; 22 கிலோ கட்டி அகற்றம் - சாதித்த டாக்டர்கள்  | 22 kgs lump removed from women 's stomach

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (27/02/2019)

கடைசி தொடர்பு:14:55 (27/02/2019)

5 ஆண்டுகளாக வலியால் துடித்த பெண்; 22 கிலோ கட்டி அகற்றம் - சாதித்த டாக்டர்கள் 

  ஜெனிபருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழு

 5 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் மூச்சுத்திணறலால் சிரமப்பட்ட வேலூர் பெண்ணுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை மூலம் 22 கிலோ கட்டியை அகற்றியுள்ளது. 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அக்ஷயா ஜெனிபர் (41). குடும்பச் சூழ்நிலை காரணமாக தனியாக வசித்துவருகிறார். இவர், கடந்த 5 ஆண்டுகளாக வயிற்றுவலி, வயிறு வீக்கத்தால் நடக்க முடியாமல் சிரமப்பட்டுவந்தார். வயிறு வீக்கம் அதிகமானதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவருக்குக் குணமாகவில்லை. 

இந்தநிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார் அக்ஷயா ஜெனிபர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அக்ஷயா ஜெனிபர் பொது அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பாலமுருகன், காயத்ரி முத்துக்குமரன், சிவகுமார், நஹீத், ஆகியோர் கொண்ட மருத்துவக் குழு 5 மணி நேரம் போராடி கட்டியை அகற்றினர். அதன் எடை 22 கிலோ. தற்போது அக்ஷயா ஜெனிபர் நலமாக இருக்கிறார். 

  ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முதல்வர் பொன்னம்பல நமசிவாயம் கூறுகையில், ``அக்ஷயா ஜெனிபருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட கட்டி, தமிழகத்தில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கட்டிகளில் அதிகம் எடை கொண்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அக்ஷயா ஜெனிபர் நலமுடன் இருக்கிறார். தற்போது அவரின் வயிறு வீக்கம் குறைந்துவிட்டது. மூச்சுத்திணறலும் ஏற்படுவதில்லை என்றார். 

இதுகுறித்து அக்ஷயா ஜெனிபர் கூறுகையில், ``எனக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வயிற்றில் திடீரென வலி ஏற்பட்டது. அப்போது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்றின் வீக்கம் அதிகமானது. இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்டேன். அப்போதுதான் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உள்ளவர்கள் எனக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறினர். இதனால் அங்கு வந்து சிகிச்சை பெற்றேன். தற்போது கட்டியை அகற்றிவிட்டனர்" என்றார்

பொது அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் காயத்ரி கூறுகையில், ``அக்ஷயா ஜெனிபரின் கர்ப்பப் பை பகுதியில் கட்டியிருப்பதை பரிசோதனை மூலம் கண்டறிந்தோம். இதனால் அவரின் வயிற்றின் வீக்கம் அதிகமாக இருந்ததால் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டார். அவரின் உடல் நலம் மோசமாக இருந்தபோதிலும் அறுவை சிகிச்சை மூலம் 22 கிலோ கட்டியை அகற்றியுள்ளோம். அகற்றப்பட்ட கட்டி நீர்க்கட்டி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 10 நாள்களில் அவர் குணமாகிவிட்டார். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்" என்றார். 

 ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை மருத்துவத் துறையில் மைல்கல் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். 


[X] Close

[X] Close