சீர்காழியில் தொடங்கிய தமிழிசை மூவர் விழா! | Tamil isai moovar festival at sirkali

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (27/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (27/02/2019)

சீர்காழியில் தொடங்கிய தமிழிசை மூவர் விழா!

மிழ் இசைக்குத் தொண்டு செய்த மூவரான முத்துதாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மும்மூர்த்திகளைப் போற்றும் வகையில் சீர்காழியில் தமிழிசை விழா இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

மூம்மூர்த்திகள்

பிறமொழி இசையால் தன் புகழ் மங்கியிருந்த தமிழ் இசையை மீண்டும் தம் பாடல்களால் மக்கள் மத்தியில் புகழ்பெறச் செய்தவர்கள் இந்த மூவரையும் `தமிழிசை மூவர்’ என்று பெயர் பெற்றனர். 

முத்துதாண்டவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சிதம்பரத்தில் தங்கி அங்கு தில்லைவாழ் இறைவன்மேல் தினமும் ஒரு பாடல் பாடுவார். அதற்கு ஈடாக இறைவன் தினமும் அவருக்கு சில தங்க நாணயங்களை அவருக்குப் பரிசளிப்பார். ஒரு நாள் அவரைப் பாம்பு தீண்ட `அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே’ என்று பாடல் பாடினார். உடனே அவர் விஷம் இறங்கியது. ஒருமுறை கொள்ளிடத்திலிருந்து அவர் சிதம்பரம் திரும்பியபோது காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சிதம்பர தரிசனம் காண இயலாது போனதே என்று வருந்தி `காணாமல் வீணிலே காலம் கழித்தோமே’ என்ற பாடலை மனமுருகப் பாடினார். உடனே காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிட்டது. இதுபோன்ற அநேக அற்புதங்களைத் தன் வாழ்வில் செய்தவர் முத்துதாண்டவர். 

பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற் புவனத்தில் வேறுமுண்டோ, சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் போன்ற பல்வேறு புகழ்பெற்ற பாடல்களைப் பாடியவர் முத்துதாண்டவர்.

மூவர் சிலை

சிதம்பரத்தின் மகிமையையும் தில்லை நடராஜப் பெருமானின் பெருமைகளையும் பாடும் நூல் `புலியூர் வெண்பா.’ இதை எழுதிப் பாடியவர் மாரிமுத்தாப் பிள்ளை. இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மாரிமுத்தாப் பிள்ளையின் முதல் மகன் சற்று சுகவீனமாக இருந்தபோது இறைவன் அவரை சிதம்பரத்தின் மீது பாடல் பாடுமாறு பணித்தார். உடனே மாரிமுத்தாப்பிள்ளை பாடியதே புலியூர் வெண்பா எனப்பட்டது. புலியூர் என்பது சிதம்பரத்துக்கு மற்றுமொரு பெயர் எனப்படுகிறது. மிகவும் உருக்கமாக இறைவனைப் புகழ்ந்துபாடும் பாடல்கள் இவருடையவை.

அருணாசலக் கவிராயர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். இவர் தனது இசையால் தமிழின் மாண்பையும் பக்தியையும் போற்றி வளர்த்தார். `ராம நாடகக் கீர்த்தனம்’ என்னும் புகழ்பெற்ற இசைக் காவியத்தை இயற்றியவர். `கடன்பெற்றார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்னும் வரி இவருடையதே. `ஏன் பள்ளி கொண்டீர் ஐயா’, `ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே’ஆகிய புகழ்பெற்ற பாடல்களைப் பாடியவர் இவர். 

இத்தகைய சிறப்புகளை உடைய தமிழ் இசை மேதைகளின் புகழை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மூவர் விழா, கலை - பண்பாட்டுத்துறை சார்பில் சீர்காழியில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (பிப்ரவரி 27) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சியைத் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். மூன்று நாள்களும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close