`தினகரன் கட்சியில் சேர்ந்த ரஞ்சித்துக்கு எங்களை விமர்சிக்கத் தகுதியில்லை!’ - பா.ம.க பிரசாரக் குழுத் தலைவர் | PMK slams actor ranjith

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (27/02/2019)

கடைசி தொடர்பு:21:10 (27/02/2019)

`தினகரன் கட்சியில் சேர்ந்த ரஞ்சித்துக்கு எங்களை விமர்சிக்கத் தகுதியில்லை!’ - பா.ம.க பிரசாரக் குழுத் தலைவர்

நடிகரும் சமூக ஆர்வலருமான ரஞ்சித் அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி கடந்த செப்டம்பர் மாதம் பா.ம.க-வில் இணைந்தார். பா.ம.க-வில் இணைந்ததற்கான காரணத்தை அப்போது அவரிடம் கேட்டபோது, ``நாட்டை மீட்டெடுத்துச் சீர்ப்படுத்தக்கூடிய தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் உண்டு. அது அன்புமணி ராமதாஸ், தமிழகத்தை ஆளும் தலைமைப் பதவியை ஏற்றால்தான் முடியும். அவருக்கு உறுதுணையாகவே கட்சியில் சேர்ந்திருக்கிறேன்’’ என்றார். தொடர்ந்து கட்சி சார்ந்த கூட்டங்களிலும் பங்கெடுத்தார்.

ரஞ்சித்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தியபோது, அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்தது. இதனால் மனமுடைந்து பா.ம.க-விலிருந்து விலகுவதாக நேற்று பத்திரிகையாளர்களைக் கூட்டி அறிவித்தார். அதையொட்டி `டி.டி.வி.தினகரன் ஒரு நல்ல மக்கள் தலைவராக வலம் வருகிறார்’ எனக் கூறி இன்று அ.ம.மு.க-வில் ரஞ்சித் இணைந்திருக்கிறார். நேற்றும் இன்றும் பா.ம.க கடுமையாக ரஞ்சித் விமர்சித்தார். பா.ம.க இதுகுறித்து என்ன சொல்ல விரும்புகிறது என்பதை அறிந்துகொள்ளும் விதமாக, பா.ம.க தேர்தல் பிரசாரக் குழு தலைவர் எதிரொலி மணியிடம் பேசினேன்.

எதிரொலி மணியன்

``ஊழலுக்கு எதிரா பேசிட்டு ஊழல் கட்சியில கூட்டணி சேர்ந்தோம்னு அவர் எங்களை விமர்சித்தார். கட்சியிலிருந்தும் வெளியே போனார். அப்படியே எந்தக் கட்சியிலும் சேராம இருந்திருந்தாக்கூட பரவாயில்லை. எங்களை ஊழல் கட்சின்னு சொல்லிட்டு ஊழல்னா என்னன்னு உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இப்போ ஜெயிலில் இருக்கிற அம்மாவை தலைமையாக் கொண்ட கட்சியில் சேர்ந்து இருக்காரு. இவருக்கு எங்களைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை’’ என்றார். 
 


[X] Close

[X] Close