`தூத்துக்குடி துறைமுகத்தின் ஆண்டு வருமானம் ரூ.600 கோடி வரை குறைய வாய்ப்பு!’ - சுங்க ஆணையர் தகவல் | There is a chance for Rs 600 crore customs duty decrease in this year of thoothukudi port, says customs official

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (27/02/2019)

கடைசி தொடர்பு:10:51 (28/02/2019)

`தூத்துக்குடி துறைமுகத்தின் ஆண்டு வருமானம் ரூ.600 கோடி வரை குறைய வாய்ப்பு!’ - சுங்க ஆணையர் தகவல்

`தூத்துக்குடியில் நடந்த தொடர் போராட்டம் மற்றும் புறச்சூழல் காரணமாக, வ.உ.சிதம்பரனார்  துறைமுகத்தில் சரக்குகள் கையாளுதல் குறைந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு சுங்க வருமானம்  ரூ.600 கோடி அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது' என சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சுங்கத்துறை அதிகாரிகள், சரக்கு கையாளும் நிறுவன குழுமங்கள், துறைமுகத்தைப் பயன்படுத்துவோர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில்,  துறைமுகத்தில் சரக்கு கையாளுதலை அதிகப்படுத்தவும், சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்றத்தின் மையமாக துாத்துக்குடி துறைமுகத்தை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து,  துறைமுகத் தலைவர்,  துணைத் தலைவர்,  சுங்கத்துறை  ஆணையர் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய துறைமுகத் தலைவர் ராமச்சந்திரன், ``தூத்துக்குடி துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளில், 70 சதவிகிதம் கொழும்பு, மலேசியா போன்ற துறைமுகங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின்னர்,  சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. துறைமுகத்தின் மிதவை ஆழம் 14 மீட்டர் அதிகரித்த  பின்னர், பெரிய கப்பல்களின் வருகையால், 30 சதவிகித சரக்கு பரிமாற்றம் நேரடியாக  நடைபெறுகிறது. மொத்த சரக்குகளையும் நேரடி பரிவர்த்தனை செய்யும் வகையில், இத்துறைமுகத்தை சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற  மையமாக மாற்றிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

தூத்துக்குடி துறைமுகம்

இதற்காக, வெளித் துறைமுகத் திட்டமும்,  துறைமுக நுழைவாயிலை 153 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அதிகரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.  இதனால், பெரிய கப்பல்கள் வர வாய்ப்புள்ளதால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு,  கப்பல் கையாளும் கட்டணம் குறையும். அத்துடன், சரக்குகளைப் பிற துறைமுகங்களுக்கு அனுப்பாமல், நேரடியாகக் கையாள முடியும். நடப்பு ஆண்டில், துறைமுகத்தின் சரக்கு கையாளும் அளவு, 35 மில்லியன் டன் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 31 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. வரும், 2035-ம் ஆண்டுக்குள்,100 மில்லியன் டன் சரக்கு கையாளத் திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்துவருகின்றன” என்றார்.

தூத்துக்குடி துறைமுகம்

சுங்கத் துறை ஆணையர் திவாகர் பேசுகையில், ``தூத்துக்குடி துறைமுகத்தில், எளிதாகத் தொழில் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுவருகின்றன. டிஜிட்டல் எக்சேஞ்சு திட்டம் மூலம்  ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், தங்கள் சரக்குகள் எங்குள்ளன என்பதைக் கண்காணித்து, அதற்கேற்ப வியாபாத்தில் ஈடுபட முடிகிறது. பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் மூலம் நடப்பதால்,  ஐ.ஜி.எஸ்.டி-களை விரைவாக திரும்பப்பெற முடிகிறது” என்றார். துறைமுகத்தின் சுங்க வருவாய் குறித்து  அவரிடம் கேட்டபோது,  “துாத்துக்குடியில் நடந்த தொடர் போராட்டம் மற்றும் புறச்சூழல் காரணமாக, கடந்த ஆண்டு  ரூ.4,400 கோடியிலிருந்த வருமானம், இந்த ஆண்டு, ரூ.3,800 கோடியாகக்  குறைய வாய்ப்பு உள்ளது” என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close