`ஜெருசலேம் புனித பயணத்துக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி!’ - தமிழக அரசு அறிவிப்பு | TN government announces financial aid to Jerusalem pilgrimage

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (28/02/2019)

கடைசி தொடர்பு:07:00 (28/02/2019)

`ஜெருசலேம் புனித பயணத்துக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி!’ - தமிழக அரசு அறிவிப்பு

ஜெருசலேம் புனித பயணம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

வேலூர் கலெக்டர் அலுவலகம்

தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக, தமிழக அரசால் 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபற்றி, வேலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``புனிதப் பயணம் செல்ல விரும்பும், கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களின் புனிதத் தலங்களை உள்ளடக்கியது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். 

இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்’’ என்று குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கல்சமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரில் வரத் தேவையில்லை. கிறிஸ்தவர்கள், இத்திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close