`தே.மு.தி.க-வுடன் நாங்கள் பேசுகிறோம்; ஸ்டாலின் கெஞ்சுகிறார்!'- கடம்பூர் ராஜூ விமர்சனம் | The DMK is the ones who are wary of the coalition says minister kadamur raju

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (28/02/2019)

கடைசி தொடர்பு:12:40 (28/02/2019)

`தே.மு.தி.க-வுடன் நாங்கள் பேசுகிறோம்; ஸ்டாலின் கெஞ்சுகிறார்!'- கடம்பூர் ராஜூ விமர்சனம்

”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த கூட்டணியைத்தான் நாங்கள் அமைத்துள்ளோம். அ.தி.மு.க-வோடு அனுசரணையாக விரும்பி வருபவர்களுடன் மட்டுமே கூட்டணி வைக்கிறோம். கூட்டணிக்காக அலைகிறவர்கள் தி.மு.க-வினர்தான்” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 புதிய நகராட்சி கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றும் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் ரூ.5 கோடி மதிப்பில் கிழக்குப் பூங்கா சாலையில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, முதல்வர் காணொளி மூலம் திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய நகராட்சிக் கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “காஷ்மீர் புல்வாமா பகுதியில், தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப். வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு, கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் போராடிய நேரத்தில், மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெறாமல், அங்கு கள்ளத்தனமாக வைகோ சென்ற காரணத்தால்தான் புலிகள் பதுங்கி இருந்த இடம் வெளி உலகத்துக்குத் தெரியவந்தது. அவர், எப்போதும் இப்படிப்பட்ட தவறான நிலைப்பாட்டையே எடுப்பார். அ.திமு.க-வைப் பொறுத்த வரை கூட்டணிக் கட்சிகளை மதிப்போம். வைகோ தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றபோது  அவமானப்படுத்தப்பட்டார். அப்போது, பிணம்கூட கோபாலபுரம் பக்கம் செல்லாது எனக் கூறினார் வைகோ. ஆனால் இன்று,  தி.மு.க-வினர் அவரை மீண்டும் கூட்டணியில் சேர்த்துள்ளனர்.

கடம்பூர் ராஜூ

கூட்டணிக்காக அலைகிறவர்கள் தி.மு.க-வினர்தான். ஆனால், அ.தி.மு.க-வோடு அனுசரணையாக விரும்பி வருபவர்களுடன் மட்டுமே கூட்டணி வைக்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த கூட்டணியைத்தான் நாங்கள் அமைத்துள்ளோம். கடந்த 1998-ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் துணிந்து கூட்டணி அமைத்தது ஜெயலலிதாதான். அந்தக் கூட்டணியில்தான் பா.ம.க-வும் இடம் பெற்றிருந்தது. அதில், வைகோவும் இருந்தார். வைகோ அரசியலில் ஒரு நிலைத்தன்மை இல்லாதவர். கடந்த 2014ல் மோடியைப் போல ஒருவர் இனி பிறந்துதான் வரவேண்டும் எனக்கூறி, மோடிக்குப் புகழாரம் சூட்டினார். ஆனால், தற்போது அவர் தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

தே.மு.தி.க-வுடன் அ.தி.மு.க தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஆனால், ஸ்டாலின்தான் நேரடியாகச் சென்று கெஞ்சிக் கூத்தாடிவிட்டு வந்திருக்கிறார். முகிலன், தமிழக அரசை எதிர்த்து மட்டும் அல்ல பல பொதுவான பிரச்னைக்காகவும் போராடி உள்ளார். எனவே, தமிழக அரசுக்கும் அவருக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை. இல்லாத ஒரு பிரச்னையை உருவாக்குவதே வைகோ போன்றவர்களின் வேலை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close