மாடம்பாக்கம் ஏரியிலிருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டம்..! கொந்தளிக்கும் மக்கள் | Madambakkam people protest for sucking 20 litre water scheme from the lake

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (28/02/2019)

கடைசி தொடர்பு:14:38 (28/02/2019)

மாடம்பாக்கம் ஏரியிலிருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டம்..! கொந்தளிக்கும் மக்கள்

ஏரிப் பகுதியில் புதிதாக 5 கிணறுகள் அமைத்து, தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்திற்கு எதிராக மாடம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாடம்பாக்கம் ஏரியிலிருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டம்..! கொந்தளிக்கும் மக்கள்

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையானது, செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளை நம்பியதாக உள்ளது. இந்த 4 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு ஏறத்தாழ 11 ஆயிரம் மில்லியன் கன அடியாகும். தற்போதுவரை இந்த ஏரிகளின் நீர் மட்டம், மொத்தக் கொள்ளளவில் 10 சதவிகிதத்தைக்கூட எட்டவில்லை. இந்த நிலையில் சென்னை மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மாற்று ஏற்பாடாக, மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கல்குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் நீர், சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது.

மாடம்பாக்கம் மக்கள் போராட்டம்

மத்திய பசுமைத் தீர்ப்பாயமானது, சமீபத்தில் சென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்காததைக் கண்டித்து, தமிழகப் பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அதேபோல் சென்னையின் நீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளைப் பராமரிக்க, 7 கோடி ரூபாயில் 15 ஏரிகளைப் பராமரிக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் எந்த விதமான பராமரிப்புப் பணிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கெனவே, காலநிலை மாறுபாடுகளால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைப் பொழிவானது மிகவும் குறைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் மாநில அரசு, நீர் ஆதாரங்களைப் பராமரிப்பதில் மெத்தனம் காட்டுவது, சென்னை மக்களின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள கிழக்கு தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள மாடம்பாக்கம் ஏரியானது, சுமார் 250 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு திகழ்கிறது. அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மாடம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இந்தச் சூழலில் ஏரிப் பகுதியில் புதிதாக 5 கிணறுகள் அமைத்து, தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்திற்கு எதிராக மாடம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய மாடம்பாக்கம் ஏரிப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ``கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 20 அடியிலிருந்த நிலத்தடி நீர்மட்டமானது, தற்போது 300 அடிக்கும் கீழே சென்று விட்டது. மாடம்பாக்கம் ஏரியைச் சுற்றி வசிக்கும் 50 ஆயிரம் மக்களும், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும் இந்த ஏரி நீரைத்தான் நம்பியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாகப் பாராமரிப்பு இல்லாமல் குப்பைகள் கொட்டும் இடமாக இருந்த ஏரியை, அந்தப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், குறிப்பிட்ட கால இடைவேளைக்கு ஒருமுறை சுத்தம்செய்து 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியைப் பராமரித்து வருகிறார்கள். எங்களின் இந்த முயற்சியால் தற்போது சென்னையைச் சுற்றி உள்ள சுத்தமான பெரிய ஏரிகளில் ஒன்றாக மாடம்பாக்கம் ஏரி விளங்குகிறது.

மாடம்பாக்கம் ஏரிப்பகுதி

இந்நிலையில் மாடம்பாக்கம் ஏரியில் 52 அடி அகலத்தில் 100 அடி ஆழத்திற்கு 5 கிணறுகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும் என்றும் அதில் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் சிட்லப்பாக்கம் பகுதிக்கும், மீதமுள்ள 2 லட்சம் லிட்டர் தண்ணீரானது மாடம்பாக்கம் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. யாரோ  சிலர் பயனடைவதற்கு 30 லட்சம் ரூபாய் மாடம்பாக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்டு வசிக்கும் மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், இதன் மூலம் பயனடைபவர்கள் சிட்லப்பாக்கம் மக்கள்தான். ஏற்கெனவே இந்தத் திட்டத்தின் பணிகள் தொடங்கியபோதே, மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போது அதைத் தடுத்துநிறுத்தும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். இப்போது இத்திட்டத்திற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றது” என்றனர்.

இந்தத் திட்டம் குறித்துப் பேசிய அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஹாரிஸ் சுல்தான், ``சென்னையில் ஏற்கெனவே அந்தந்தப் பகுதி மக்களின் தேவைகளுக்காக அந்தப் பகுதியிலேயே ஏரிகள் உள்ளன. இப்போது சிட்லப்பாக்கத்திற்க்கு நீர் எடுத்துச் செல்லும் திட்டம் தேவையில்லாத ஒன்றாகும். சிட்லப்பாக்கத்திலே பெரிய ஏரி ஒன்று உள்ளது. அதை முறைப்படி பராமரித்தாலே, அந்தப் பகுதி மக்களின் தண்ணீர் தேவைக்கு போதுமானதாகும். அதற்கான முன்னெடுப்புகளை அந்தப் பகுதி மக்களும் அரசும் சேர்ந்து எடுக்க வேண்டும்” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close