`கலங்கவில்லை, என் மகன் மீண்டு வருவான்' -  அபிநந்தன் அப்பா பெருமிதம்  | Abhinandan father about the situation

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (28/02/2019)

கடைசி தொடர்பு:13:55 (28/02/2019)

`கலங்கவில்லை, என் மகன் மீண்டு வருவான்' -  அபிநந்தன் அப்பா பெருமிதம் 

அபினந்தன்

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. `என் மகன் மீண்டு வருவான், எங்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக நாட்டுக்கு சேவை செய்துவருகிறது' என்று அபிநந்தனின் அப்பா வர்த்தமான் பெருமிதத்துடன் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கூறியுள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார். அவரிடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். அபிநந்தனை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அவரின் தாத்தா, இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். அப்பா வர்த்தமான், பிரான்ஸ் நாட்டில் விமானியாகப் பணியாற்றிவிட்டு இந்திய விமானப்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

அபினந்தன்

அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய பிறகு அவரின் பெற்றோர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் விமானப்படை அதிகாரிகளும் அபிநந்தனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்ற வண்ணம் உள்ளனர். வர்த்தமானைச் சந்தித்த சென்னை காவல்துறை உயர்அதிகாரி ஒருவர், அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அப்போது அந்த அதிகாரியிடம், `நானும் விமானப்படையில் இருந்தவன். என்னுடைய அப்பாவும் விமானப்படையில் பணியாற்றியவர். எங்களைப்பார்த்துதான் அபிநந்தனும் விமானப்படையில் சேர்ந்தார். தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் அவர் இருக்கிறார் என்ற தகவல் தந்தை என்ற முறையில் எனக்கு வருத்தத்தை அளித்தாலும் முன்னாள் ராணுவ அதிகாரி என்ற முறையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. என் மகனுக்காக நான் கலங்கமாட்டேன். வீர மகனை பெற்றேன் என்ற பெருமிதம் இருக்கிறது. எப்படியும் என் மகன் மீண்டு வந்து என்னைச் சந்திப்பான் என்ற நம்பிக்கை உள்ளது' என்று வர்த்தமான் கம்பீரமாகக் கூறியுள்ளார். அதைக் கேட்ட போலீஸ் உயராதிகாரி புல்லரித்துப் போய் விட்டதாக நம்மிடம் கூறினார்.

அபினந்தன்

அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற பிரார்த்தனை நடந்துவருகிறது. அவரின் சொந்த கிராம மக்கள் அபிநந்தன் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதில் எங்களுக்கும் பெருமையாக இருக்கிறது என்கின்றனர். அபிநந்தன் டீ குடித்தபடியே பேசிய வீடியோவைக் கேட்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தேசபற்று தானாகவே ஊற்றெடுக்கும். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு தைரியமாகவும் துணிச்சலுடன் அபிநந்தன் பதிலளிக்கிறார். அந்த வீடியோவைப் பார்த்த அபிநந்தனின் குடும்பத்தினரின் கண்கள் கலங்கினாலும் அவருக்கு நாட்டின் மீதுள்ள பாசத்தைக் கண்டு பிரமிப்பதாகக் கூறினர். 

வர்த்தமானைச் சந்திக்க விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரின் மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் சென்றனர். அவர்கள் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர். அபிநந்தனின் பெற்றோரிடம் பேச முயன்றபோது அவர்களைச் சந்திக்க மீடியாக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர்களும் அந்தக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விசாரணைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். குடியிருப்பின் வெளியில் பத்திரிகையாளர்கள் காத்திருக்கின்றனர். 

அபிநந்தனின் பயோ டேட்டா 

 அபிநந்தனின் தாத்தா, அப்பா இருவரும் விமானப்படையில் பணியாற்றியதால் அவருக்கும் சிறுவயது முதலே விமானியாக வேண்டும் என்ற ஆசை. படிப்பை முடித்த அவர், 2004ம் ஆண்டு தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்றார். இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றிவருகிறார். குடும்பத்தையும் நாட்டையும் இருகண்களாகவே பார்த்துவந்தவர் அபிநந்தன்.


[X] Close

[X] Close