குமரியில் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் தொடர் மாற்றங்கள் - குழப்பத்தில் பா.ஜ.க-வினர் | Multiple changes in PM modi program

வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (28/02/2019)

கடைசி தொடர்பு:14:26 (28/02/2019)

குமரியில் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் தொடர் மாற்றங்கள் - குழப்பத்தில் பா.ஜ.க-வினர்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்துவருவதால் பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சி மற்றும் அரசியல் பொதுக்கூட்டம் மார்ச் 1-ம் தேதி (நாளை) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு நிகழ்ச்சிக்காகவும், அரசியல் பொதுக் கூட்டத்திற்காகவும் தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நிகழ்ச்சியில் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேடை அமைக்கும் பணி

தொடக்கத்தில் காலை 10 மணிக்கு அரசு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அரசியல் பொதுக்கூட்டமும் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் செய்தியாளர்கள் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது எனக் கூறினர். இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நாளை மதியம் 1 மணிக்கு மேல் நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசு நிகழ்ச்சி மட்டுமே நடக்கும் என்றும், அரசியல் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுவதால் பிரதமர் மோடி கலந்துகொள்ளுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தமிழக முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாவதால் பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


[X] Close

[X] Close