10 மணி நேரம் சென்னை மின்சார ரயிலில் பயணித்த நாய் - மீட்டது எப்படி?  | dog traveled in chennai train for ten hours

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (28/02/2019)

கடைசி தொடர்பு:15:05 (28/02/2019)

10 மணி நேரம் சென்னை மின்சார ரயிலில் பயணித்த நாய் - மீட்டது எப்படி? 

ரயிலிருந்து மீட்கப்பட்ட நாய்

சென்னை மின்சார ரயிலில் 10 மணி நேரமாகப் பயணித்த பெண் நாயை புளு கிராஸ் அமைப்பினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது அந்த நாய் புளூ கிராஸ் அலுவலகத்தில் உள்ளது. 

 சென்னை வேளச்சேரியிலிருந்து கடற்கரைக்கு நேற்று காலை மின்சார ரயில் சென்றது. காலை நேரம் என்பதால் ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதின. மின்சார ரயிலில் கடைசியிலிருந்து மூன்றாவது ரயில் பெட்டியின் ஒரு இருக்கைக்குக் கீழ் ஒரு நாய் படுத்திருந்தது. கூட்ட நெரிசலில் அதை பலர் கவனிக்கவில்லை. அப்போது எதிர்பாராமல் பயணி ஒருவர் நாயை மிதித்துவிட நாய், லொள் எனக் குரைத்தது. சத்தம் கேட்டு சீட்டுக்குக் கீழ் பயணிகள் பார்த்தனர். அப்போது சீட்டுக்குக் கீழ் நாய் படுத்திருப்தைப் பார்த்த பயணிகள் பீதியில் உறைந்தனர். ஆனால், உண்மையில் பயணிகளைக் கண்டுதான் அந்த நாய் பயத்தில் நடுங்கியப்படி இருந்தது. ரயிலில் பயணித்த சிலர் அய்யோ பாவம் என்ற பரிதாபத்தோடு இறங்கிச் சென்றனர். இன்னும் சிலர் அந்த நாயால் நமக்கு ஏன் வம்பு என்று அடுத்த பெட்டிக்கு மாறினர். 

ரயிலிருந்து மீட்கப்பட்ட நாய்  

அந்த ரயில் பெட்டியில் பயணித்த சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த டியூசன் ஆசிரியர் பார்த்தசாரதி, நாயின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டார். அதோடு இல்லாமல் புளூ கிராஸ் அமைப்பின் பொது மேலாளர் வில்லியத்தை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார். அப்போது மணி காலை 8.15. அதற்குள் இன்னும் சில பயணிகள் ரயில்வே போலீஸாரிடம் கூறலாம் என்று சொல்ல, அதற்கு ஓடும் ரயிலில் லத்தியைக் கொண்டு நாயை விரட்டினால் விபரீதம் ஏற்பட்டுவிடும் எனக் கூறினர். இதனால் காவல்துறையினருக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. 

 வேளச்சேரியிலிருந்து புறப்பட்ட மின்சார ரயில் மந்தைவெளி ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது அங்கு வந்த விலங்கு நல ஆர்வலர் சுரேந்தர் அந்தப் பெட்டியில் ஏறினார். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாயை அவரால் மீட்க முடியவில்லை. இதனால் நாயை கண்காணித்தப்படியே அதே ரயிலில் சுரேந்தர் பயணித்தார். கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் மீண்டும் பயணிகள் ஏறினர். இதனால் நாயை சுரேந்தரால் ரயிலிருந்து கீழே இறக்க முடியவில்லை. நாய் குறித்த தகவல்களை புளூ கிராஸ் அமைப்பினரிடம் சுரேந்தர் போனில் தெரிவித்தார். 

  புளு கிராஸ் நிர்வாகிகள்

இதையடுத்து வில்லியம் தலைமையில் ரஜிபுல், சந்தோஷ் என ஒரு டீம் வேளச்சேரி ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். வேளச்சேரி ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ரயில் டிரைவர் மற்றும் கார்டுக்கு தகவல் தெரிவித்தனர். காலை 10.15 மணியளவில் ரயில் வேளச்சேரிக்கு வந்ததும் புளூ கிராஸ் அமைப்பினர் நாயை பத்திரமாக மீட்டனர். அதுவரை ரயில் நிறுத்தப்பட்டது. பிறகு வேளச்சேரியில் உள்ள புளூ கிராஸ் அலுவலகத்துக்கு நாயைக் கொண்டு வந்து தடுப்பு ஊசி போட்டனர். பிறகு நாய்க்கு உணவளித்தனர். தற்போது வேளச்சேரி புளூ கிராஸ் அலுவலகத்தில் ரயிலிருந்து மீட்கப்பட்ட நாய், சுதந்திரமாகச் சுற்றிவருகிறது. 

 இதுகுறித்து வில்லியம் கூறுகையில், ``மின்சார ரயிலில் நாய் பயணிக்கும் தகவலை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் எங்களுக்கு தெரிவித்தார். அவர் தினமும் அந்த ரயிலில் மயிலாப்பூருக்குச் செல்வார். அங்கு டியூசன் சொல்லிக் கொடுப்பார். அவர்தான் நாயை மீட்க உறுதுணையாக இருந்தார். அவரைப் போல மற்றவர்களும் உதவ வேண்டும். 

 ரயிலில் நாய் பயணிக்கும் தகவல் கிடைத்ததும் வேளச்சேரி ரயில் நிலையத்துக்குச் சென்றோம். சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து நாயை பத்திரமாக மீட்டுள்ளோம். ரயில் பெட்டியில் நாய் சிறுநீர் கழித்துள்ளது. அதை வைத்து பார்க்கும்போது சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக நாய் அந்த ரயில் பெட்டியில் இருந்துள்ளது. நாங்கள் மீட்ட பெண் நாய், பத்து மாத குட்டி. மேலும், இந்த நாய் டாபர்மேன் மற்றும் நாட்டு நாய் என இரண்டு சேர்ந்த இனம் எனத் தெரியவந்துள்ளது. ரயிலில் மீட்ட பெண் நாயை ஆர்வமிருப்பவர்கள் தத்தெடுக்கலாம். இந்த நாய் பொதுமக்களைப் பார்த்து பயப்படவில்லை. இதனால் இந்த நாய் வீட்டில் வளர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்" என்றார். 


[X] Close

[X] Close