`திருப்பூர் வெளிநாடு போல மாறப்போகிறது!’ - முதல்வர் பழனிசாமி நம்பிக்கை | Tiruppur will become hi tech place, says edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (28/02/2019)

கடைசி தொடர்பு:15:50 (28/02/2019)

`திருப்பூர் வெளிநாடு போல மாறப்போகிறது!’ - முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் திட்டப் பணிகளின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ``தற்போதைக்கு 1807 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 10 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் 2 வருடங்களில் முடித்து நாங்களே வந்து திறந்து வைப்போம். தி.மு.க ஆட்சியில் பல்வேறு பகுதிகளில் பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்கள். ஆனால், அவை அனைத்தையும் அப்படியே விட்டுச் சென்ற நிலையில், அ.தி.மு.க அரசுதான் அந்தத் திட்டங்களை நிறைவேற்றியது. நம் அரசு அனைத்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி சரியான முறையில் திட்டமிட்டு, திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம்.

எடப்பாடி

முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தற்போது நிறைவேற்றி வருகிறோம். ஆனால், தமிழகத்தில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இது மக்கள் விரோத ஆட்சி என மு.க ஸ்டாலின் பேசி வருகிறார். அவர் வேண்டுமென்றே மக்களைக் குழப்பி வருகிறார். எத்தனையோ கனவுகளைக் கண்டவர் ஸ்டாலின். அ.தி.மு.க உடையும் எனக் கனவு கண்டார். இந்த ஆட்சி ஆறு மாதங்கள் தாங்குமா, ஓராண்டு காலம் நிற்குமா எனப் பல கனவுகளைக் கண்டார். ஆனால், அவை அனைத்தும் கானல் நீராகிவிட்டது. தற்போது 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3-ம் ஆண்டை துவங்கிவிட்டது நம் அரசு. ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்றாலும் சரி, தெருத்தெருவாக சென்றாலும் சரி, மக்கள் அவரைப் பற்றி ஏற்கெனவே நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சியின் மூலமாகத் திருப்பூரில் மட்டும் எத்தனை திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் என்பதை
ஸ்டாலினுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 2 ஆண்டுகள் கழித்துப் புதிதாக யாராவது திருப்பூர் மாநகருக்கு வந்தால், ஒருவேளை வெளிநாட்டுக்குத்தான் வந்துவிட்டோமா ! என்று எண்ணும் அளவுக்கு திருப்பூர் மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக மாற்றம் பெற இருக்கிறது” என்றார்.


[X] Close

[X] Close