தி.மு.க ஒன்றியச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!- பெண்களை அடித்ததால் ஸ்டாலின் அதிரடி | DMK removes pudukottai cadre after allegedly he attacks women

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (28/02/2019)

கடைசி தொடர்பு:16:05 (28/02/2019)

தி.மு.க ஒன்றியச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!- பெண்களை அடித்ததால் ஸ்டாலின் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பெண்களிடம் அத்துமீறித் தாக்குதல் நடத்திய தி.மு.க நிர்வாகி சரவணனின் ஒன்றியச் செயலாளர் பதவியைப் பறித்ததுடன், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தி.மு.க தலைமைக் கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சரவணன் மீதும் அவரது உறவினர்கள் மீதும் காவல்துறை 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக ஒன்றிய செயலாளர் சரவணன்

திருமயம் தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தவர் சரவணன். இவரின் அண்ணன் சிவராமன். இவர் திருமயம் பைரவர் கோயிலில் சிதறு தேங்காய் சேகரிப்பதை குத்தகை எடுத்துள்ளார். மேலும், தேங்காய் விற்பனைக் கடை நடத்தி வந்தார். இங்கு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வாசுகி என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். வாசுகியின் கடையால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி பெட்டிக்கடையைக் காலி செய்யக் கோரி மிரட்டினர். வாசுகி கடையை காலி செய்ய மறுக்கவே, திருமயம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் சரவணன் மற்றும் அவரின் உறவினர்கள் கட்சியினர் சேர்ந்து கடையை சூறையாடியதுடன், பெண்களை அடித்து, உதைத்துத் துன்புறுத்தினர்.

பெண்களைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தி.மு.க தலைமைக் கழகம் சரவணன் வகித்து வந்த ஒன்றியச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், திருமயம் காவல்துறை சரவணன், சிவராமன் உட்பட இவர்களது உறவினர்கள் 5 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களைத் தேடி வருகின்றனர். 


[X] Close

[X] Close