`துப்பாக்கி முனையில் நிர்மலா தேவியை போலீஸார் மிரட்டினர்!’- வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் | CBCID police threatening nirmala devi in gun point, says advocate pasumpon pandiyan

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (28/02/2019)

கடைசி தொடர்பு:16:20 (28/02/2019)

`துப்பாக்கி முனையில் நிர்மலா தேவியை போலீஸார் மிரட்டினர்!’- வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்

`உண்மையை வெளியே சொல்லக் கூடாது என நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி போலீஸார் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். சி.பி.ஐ விசாரணைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்’ நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் தெரிவித்தார்.

நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளை தவறாக வழிகாட்டிய வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை ஜாமீன் கேட்டும் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஆஜராவதற்காக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றம் வந்தனர். ஆனால், நிர்மலாதேவியை காவல்துறையினர் ஆஜர்படுத்தவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி மார்ச் 20-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

பசும்பொன்பாண்டியன்

இதுகுறித்து நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``கடந்தமுறை காவல் நீட்டிப்புக்காக ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி பேட்டியளிக்க முயன்றபோது அவரை காவல்துறையினர் பேசவிடாமல் இழுத்தடித்தனர். அதனால், அவரது உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அதுதொடர்பாக காவல்துறையினர் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். கொலைக் கைதிகளுக்கு கூட ஜாமீன் வழங்கப்படும்போது 10 மாதம் பிணை வழங்காததற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கக் கூடாது என தடை உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம். சி.பி.ஐ விசாரணையை முழுமையாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

முருகன்இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை மறைத்துவிட்டு அவர்களை தப்ப வைப்பதற்காகவே சி.பி.சி.ஐ.டி போலீஸார் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கி வழக்கை எழுதியுள்ளனர். செஷன்ஸ் வழக்கில் ஆஜராகும் விசாரணைக் கைதிகளை நேரடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்துவது தான் வழக்கம். ஆனால், காவல் நீட்டிப்புக்காக நிர்மலாதேவியை இங்கே அழைத்து வரவில்லை. வீடியோ கான்பரன்ஸ் என்பது அரிதான ஒன்று. கடந்த ஜனவரி 30-ம் தேதி ஆஜராக வந்த நிர்மலாதேவி சி.பி.சி.ஐ.டி. மிரட்டியதாக பத்திரிகையாளர்களிடம் கூறியதால் மருத்துவமனை, சிறை என தொடர்ந்து மிரட்டப்படுகிறார்.

கடந்த முறை அவர் சென்ற போலீஸ் வாகனத்தை மறித்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் துப்பாக்கியைக் காட்டி பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசக் கூடாது என நிர்மலாதேவியை மிரட்டியுள்ளனர். ஆனால் உயிரே போனாலும் உண்மையைச் சொல்வேன் என அவர் கூறியதால் வேனுக்குள்ளேயே சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கியுள்ளனர். இதனால் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தக் காயங்கள் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காகவே அவரை இங்கே அழைத்து வரவில்லை. ஜாமீனில் வரக்கூடாது என்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். மன உளைச்சலால் சிறையில் தற்கொலைக்கு முயன்றார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிறையில் அவர் எல்லா வகையான தொல்லைகளையும் அனுபவித்து வருகிறார்’’ எனத் தெரிவித்தார்.

`இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளேன். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் தற்போது எதுவும் பேச முடியாது’ என உதவி பேராசிரியர் முருகன் தெரிவித்தார்.


[X] Close

[X] Close