`முகிலனைக் கண்டுபிடிக்காவிட்டால் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!'- சமூக அமைப்புகள் | Government should take action to find Mukilan, says Activist

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (28/02/2019)

கடைசி தொடர்பு:17:20 (28/02/2019)

`முகிலனைக் கண்டுபிடிக்காவிட்டால் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!'- சமூக அமைப்புகள்

சுற்றுச்சூழல் போராளி முகிலனைக் கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, `சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலனை இந்த அரசு கண்டுபிடிக்க, மக்கள் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும்''என்று வலியுறுத்தினர்.

முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மணல் குவாரிகளை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தினார் முகிலன். இதனால் பல குவாரிகள் இழுத்து மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான போராட்டங்களை நடத்தினார். இந்தப் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக, பல ஆதாரங்களை வீடியோவாக கடந்த 13 தினங்களுக்கு முன்னர் முகிலன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு, முகிலன் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக ரயில் நிலையம் வந்தார். ஆனால், முகிலன் மதுரைக்கும் வரவில்லை, வேறு எங்கும் செல்லவில்லை. திடீரென்று காணாமல் போய்விட்டார். முகிலனைக் கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் தழுவிய அளவில் அதை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், கரூர் மாவட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இணைந்து, கரூர் தாலுகா அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூரில் நடந்த ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். அதோடு, ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அக்னி இல.அகரமுத்து, சாமானிய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், தமிழ் ஆர்வலர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் சக்திவேல், சமூகக் கல்வி மேம்பாட்டு இயக்கம் ஆசிரியர் ராமசாமி, திராவிட கழகம் சதாசிவம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சிவமணி, கரூர் தமிழ்ச் சங்கம் சார்பில் வழக்கறிஞர் இளம்புலி சதீஷ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, முகிலனை மீட்கக்கோரி கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தனபால், ``கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இயற்கை கொள்ளைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியவர் முகிலன். தமிழகத்திலேயே அதிகமாக இங்கேதான் மணல் கொள்ளை நடைபெற்றது. தனது தொடர்ச்சியான போராட்டங்களால் அதைத் தடுத்து நிறுத்தியவர் முகிலன். அப்படிப்பட்ட இயற்கை போராளி மர்மமான முறையில் காணாமல் போய் இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முகிலன் விவகாரத்தில் இந்த அரசு அசட்டையாக இருக்கிறது. இயற்கை போராளி முகிலனைக் கண்டுபிடித்து, மக்கள் பார்வைக்கு இந்த அரசு கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இல்லைன்னா, தக்க பாடம் புகட்டுவோம்" என்று எச்சரித்தார்.


[X] Close

[X] Close