தேசிய வானியல் கண்காட்சியில் 6 ஆண்டுகளாகச் சாதிக்கும் அரசுப் பள்ளி! | national science day exhibition in Ooty

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (28/02/2019)

கடைசி தொடர்பு:18:25 (28/02/2019)

தேசிய வானியல் கண்காட்சியில் 6 ஆண்டுகளாகச் சாதிக்கும் அரசுப் பள்ளி!

கணித மேதை சர்.சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதன் நினைவாக இந்திய அளவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி, தேசிய அறிவியல் தினம் காெண்டாடப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினத்தையாெட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான விநாடி வினா, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்  நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் தனியார் பள்ளிகளே பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவந்தன. கோத்தகிரியை அடுத்துள்ள கேர்கம்பை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த அறிவியல் போட்டிகளில் பங்கேற்று, மாணவர்களின் படைப்புத் திறன்களின் மூலம் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் குவித்துவருகின்றனர்.

அறிவியல் போட்டி

தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள், முதல் தலைமுறை மாணவர்களைக் கொண்டு இயங்கும் இந்த அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் துணையாேடு, மாவட்ட, மாநில அளவிலும் அறிவியல் தொடர்பான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெறுகின்றனர். ஆறாவது முறையாக தேசிய அறிவியல் தின விழாவில் பங்கேற்று வரும் கேர்கம்பை  அரசுப் பள்ளி மாணவர்கள், இம்முறை நீர் வளங்களைக் கையாள்வது குறித்த புதிய வழிமுறைகளைக் காட்சிப்படுத்தினர். விழாவுக்கு வந்திருந்த தனியார் பள்ளி, பொறியியல் கல்லூரி மாணவர்கள் வியக்கும் வகையில் தெளிவாக விளக்கி அவர்களின் பாராட்டுகளையும் பெற்றனர்.

இது குறித்து கேர்கம்பை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் உதவி ஆசிரியர் ஆனந்த் கூறுகையில், ``எங்கள் பள்ளி, வசதிகள் குறைந்த கிராமப் பகுதியில் அமைந்துள்ளது. மாணவர்களை, அதிகம் அறிமுகம் இல்லாத வானியல் துறையில் நாட்டம் ஏற்படும் வகையில் வகுப்புகளை நடத்தினோம். பெரும்பாலான மாணவர்கள் வானிலை குறித்து கற்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அதனால் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் அறிவியல் போட்டிகளில் பங்கேற்று வருகிறாேம். உதகையில் தேசிய வானியல் ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெறும் தேசிய அறிவியல் நிகழ்வில் தொடர்ந்து ஆறாவது முறையாகப் பங்கேற்கும் ஒரே அரசுப் பள்ளி எங்கள் பள்ளி மட்டும்தான்’’ என்றார்.

மாணவர் ராகுல்

கண்காட்சி அரங்கில் பார்வையாளர்களுக்கு நீர்வள மேலாண்மை குறித்து விளக்கிக் காெண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் ராகுல் பேசுகையில், ``எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் அறிவியல் சம்பந்தமா எங்க போட்டிகள் நடந்தாலும் கூட்டிட்டுப் போவாங்க, இந்த முறை நீர் வளங்களை எப்படி பாதுகாப்புடன் கையாள்வது என்பது சம்பந்தமா காட்சிக்கு வச்சிருக்கோம். ஏன்னா நீர்வளமே ஒரு நாட்டின் வளம். அத ரொம்ப சிக்கனமா பாதுகாப்பா பயன்படுத்தி சேமிக்கணும், என்னமாதிரி புதிய கண்டுபிடிப்புகள் வேணும், வீட்டுத் தண்ணீர் தொட்டி நிரம்புனா கூட உடனே அலாரம் அடித்து, தானாக மாேட்டார் ஆஃப் ஆகும் தாெழில்நுட்பம் குறித்து  பார்வையாளர்களுக்கு விளக்கி வருகிறோம்’’ என்றார். 

மலை கிராமத்தில் உள்ள ஒரு சாதாரண ஆரம்பப்பள்ளி, தொழில்நுட்பங்கள் மிகுந்த எல்லா வசதிகளும் கிடைக்கப்பெற்ற மாணவர்களை மிஞ்சும் வகையில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தங்கள் அபார திறமைகளைக் கொண்டு அறிவியல் மாதிரிகளை உருவாக்கி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close