`எந்தக் கட்சியிலும் இணையவில்லை; புதிய அமைப்பைத் தொடங்குகிறேன்!’ - பா.ம.கவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா | Rajeshwari priya talk about her new party

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (28/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (28/02/2019)

`எந்தக் கட்சியிலும் இணையவில்லை; புதிய அமைப்பைத் தொடங்குகிறேன்!’ - பா.ம.கவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா

பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா அரசியல் கட்டமைப்பை உருவாக்க புதிய அமைப்பை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜேஸ்வரி ப்ரியா

திராவிடக் கட்சிகளோடு எப்போதும் கூட்டணி கிடையாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து ராஜேஸ்வரி ப்ரியா வெளியேறினார். இதையடுத்து, ``எதைப்பத்தியும் நான் கவலைப்பட்டதில்லை. உண்மையிலேயே எனக்கு நாட்டுப்பற்று அதிகம். நாடு இப்படி இருக்கே என்கிற வருத்தம் இருந்தது. தமிழ்நாடு இப்படி இருக்கு. எல்லா இடத்திலும் லஞ்சம் இருக்கு, வீதிக்கு வீதி டாஸ்மாக் இருக்கு. இது மாதிரி நிறைய வருத்தம் இருந்ததால்தான், எனது எட்டு வயது, ஆறு வயது குழந்தைகளை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன். ஒவ்வொரு மேடைக்கு வரும்போது, கடவுளுக்கு சேவை செய்கிறமாதிரிதான் வீட்டைவிட்டு வெளியே வருவேன்.” என்று தெரிவித்திருந்த அவர், `ராமதாஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவரைத்தொடர்ந்து நடிகர் ரஞ்சித்தும் பா.ம.கவிலிருந்து விலகினார். இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேஸ்வரி ப்ரியா, ``அரசியல் கட்டமைப்பை உருவாக்க புதிய அமைப்பை விரைவில் தொடங்க உள்ளேன்.

ராஜேஸ்வரி

பா.ம.கவை எதிர்க்க நான் இந்த அமைப்பை ஆரம்பிக்கவில்லை. மக்களுக்காக ஆரம்பித்துள்ளேன். பா.ம.க-விலிருந்து விலகிய பிறகு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொலைபேசி வாயிலாக பாராட்டு குவிந்தன. நான் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து விட்டதாக பொய்யான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. வாழ்த்து தெரிவிக்கத்தான் அந்தச் சந்திப்பு நடைபெற்றது. கட்சியிலிருந்து வெளிவந்ததில் இருந்து எனக்கு பல இடையூறுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால், மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். பா.ம.க-விலிருந்து விலகியது ரஞ்சித்தின் தனிப்பட்ட முடிவு.

எனக்குப் பல கட்சிகளிலிருந்து அழைப்புகளும் வாழ்த்துகளும் வந்துள்ளன. முழுச் சுதந்திரம் தேவைப்படுவதால் தான் தனியாக ஒரு இயக்கத்தை அமைக்க உள்ளேன், பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கு தலைமை தாங்கும் ஒரு பெண்ணாக நான் இருக்க விரும்புகிறேன்'' என்றார். தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அவர், ``குற்றச்சாட்டு மட்டும்தான் உள்ளது இன்னும் தீர்ப்பு வரவில்லை.”  பா.ம.க , அ.தி.மு.க  இணைப்பு பற்றி, ``ஊழல்  குற்றச்சாட்டுகளை ஒரு கட்சி மீது வைத்துவிட்டு அவர்களோடே சேர்ந்துவிட்டு ஊழலைக் குறைப்பேன் எனக் கூறுவது சரியல்லை. பா.ம.க-விலிருந்து நேரடி அழைப்பு இல்லை. மாநிலத் தலைவர்கள் அழைத்தார்கள். அரசியலை எளிய முறையில் அணுகும் அமைப்பை உருவாக்க உள்ளேன். மேலும், நான் தொடங்கவுள்ள அமைப்பின் பெயர், கொள்கைகள், திட்டங்களை விரைவில் அறிவிப்பேன்” என்றார்.


[X] Close

[X] Close