`சத்யராஜ் சார் பாராட்டு ஆயிரம் மெடல்களுக்குச் சமம்!’ - தங்கப் பதக்கம் வென்ற மாணவி நெகிழ்ச்சி | Sathyaraj sir's appreciation makes me very proud, says anna university gold medalist student

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:06:00 (01/03/2019)

`சத்யராஜ் சார் பாராட்டு ஆயிரம் மெடல்களுக்குச் சமம்!’ - தங்கப் பதக்கம் வென்ற மாணவி நெகிழ்ச்சி

     அமுதசத்யா கோல்டு மெடல் வாங்கிய தருணம்...  

அண்ணா பல்கலைக்கழக அளவில் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற கரூர் மாணவியை நடிகர் சத்யராஜ் பாராட்டி வீடியோ அனுப்ப, அந்த மாணவி, 'ஆயிரம் தங்க மெடல்கள் வாங்குனாப்புல இருக்கு' என்று நெகிழ்ந்து போயிருக்கிறார்.

அமுதசத்யாவுக்கு புத்தகம் பரிசு...

கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன். தமிழ் ஆர்வலரான இவர், கரூரில் பிரபல வழக்கறிஞரும்கூட. இவரின் மகளான அமுதசத்யாவை பாராட்டிதான் நடிகர் சத்யராஜ் வீடியோ அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில், 'வணக்கம். என் அன்பு நண்பர் தமிழ் ராஜேந்திரன் புதல்வி அமுதசத்யா கல்லூரி பாடங்களில் முதல் மதிப்பெண்கள் பெற்று, தங்கமெடல் வாங்கியுள்ளார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் திறமை சிறக்க வேண்டும். திறமை வளர வேண்டும். வாழ்த்துகள். நன்றி. வணக்கம்' என்று பேசியுள்ளார்.

அமுதசத்யா தனது பெற்றோரோடு...

தமிழ் ராஜேந்திரன்இந்தப் பாராட்டால் தமிழ் ராஜேந்திரனும், அவரின் மகளும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அமுதசத்யா, ``நான் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கம்பியூட்டர் பொறியாளர் கோர்ஸை படித்தேன். கடந்த வருஷம் படிப்பு முடிஞ்சுச்சு. அதற்கு முன்பே, கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்டாகி, இப்போ கொச்சி இன்ஃபோ பார்க்கில் உள்ள விப்ரோ கம்பெனியில் பணியாற்றி வருகிறேன். இரண்டு தினங்களுக்கு முன்பு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அங்கே அண்ணா பல்கலைக்கழக அளவில் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக எனக்கு கோல்டு மெடல் வழங்கினார்கள். 'உன்னை எதிலும் முதன்மையானவளா பார்க்கணும்'னு எங்க பெற்றோர்கள் எனக்குள் ஊட்டிய எனது தன்னம்பிக்கான பரிசா அதை நினைச்சு மகிழ்ந்தேன். ஆனால், எனக்கு இன்ப அதிர்ச்சியா நடிகர் சத்யராஜ் நான் கோல்டு மெடல் வாங்கியதற்காக பாராட்டி வீடியோ அனுப்பியதை பார்த்ததும், நெகிழ்ந்து போய்ட்டேன். எனக்கு ஆயிரம் கோல்டு மெடல் வாங்கிய சந்தோஷம் கிடைச்சது. இதே உற்சாகத்தோடு, நான் வேலை பார்க்கும் இடத்திலும் பல சாதனைகளைப் புரிவேன். என்னை ஒரு நடிகர் பாராட்டினார்ங்கிற அளவில் இதை நான் பெரிசா நினைக்கலை. சத்யராஜ் அங்கிள், வெறும் நடிகர் என்பதைத் தாண்டி, பகுத்தறிவு, கல்விக்காக வெளியில் தெரியாமல் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவுவது, தமிழர்கள் பிரச்னையில் முதல் ஆளாக குரல் கொடுப்பதுன்னு எதிலும் முன்னணியில் இருப்பவர். அதனால், அவரின் பாராட்டைப் பெரிய பொக்கிஷமா நினைக்கிறேன்" என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு.

அவரின் தந்தையான தமிழ் ராஜேந்திரன்,``நான் தமிழ் உணர்வாளன். சத்யராஜும் அப்படியே. ஈழ மக்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமாரின் முதல் நினைவுநாளில் கலந்துகொண்டபோது, அவரோடு பேச முடிந்தது. அதன்பிறகு, அதுமாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, பேசிக்கொள்வோம். நான் பரிந்துரைத்த கோவை, விருத்தாசலம், சென்னையைச் சேர்ந்த மூன்று ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கட்ட நிதி கொடுத்து உதவினார். கோல்டு மெடல் வாங்கிய என் மகள் பற்றிய தகவலை அவர் சமூக வலைதளங்களில் பார்த்துட்டு, என் மகளைப் பாராட்டி பேசிய வீடியோவை எங்களுக்கு அனுப்பி, எங்களை உணர்ச்சிவசப்படவைத்து விட்டார். அவரது பரந்த மனதுக்கு கோடி நன்றிகள்" என்றார் நெக்குருகிப்போய்!.


[X] Close

[X] Close