``நான் தாய்மாமனா முன்னின்று உனக்கு சீர் செய்றேன்!’’ - கரூர் அட்சயாவை நெகிழ வைத்த மோகன் குமாரமங்கலம் | I am going to help akshaya says congress Executive Leader

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (28/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (28/02/2019)

``நான் தாய்மாமனா முன்னின்று உனக்கு சீர் செய்றேன்!’’ - கரூர் அட்சயாவை நெகிழ வைத்த மோகன் குமாரமங்கலம்

         

 அட்சயாவுக்கு 25000 நிதி வழங்கிய மோகன் குமாரமங்கலம்(பழைய படம்)

கேரள மழை வெள்ளப் பாதிப்புக்கு, தன் இதய ஆபரேஷன் செலவுக்காக வைத்திருந்த பணத்தில் 5,000 தூக்கிக் கொடுத்து, சகலரையும் நெகிழ வைத்த கரூர் சிறுமி அட்சயாவை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது ஆபரேஷன் செய்வதற்காகச் சென்னை சென்ற அட்சயா பெரிய மனுஷி ஆகிவிட, 'அவளுக்கு தாய்மாமனா இருந்து சீர் செய்றேன்’ என்று கூறி, அட்சயா குடும்பத்தை நெகிழ்ச்சிக்கு ஆட்படுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமாரபாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி - ஜோதிமணி தம்பதியின் ஏழாம் வகுப்பு படிக்கும் மகள்தான் அட்சயா. சுப்பிரமணி மறைந்துவிட, கூலி வேலைக்குப் போய் மகளை காப்பாற்றி வருகிறார் ஜோதிமணி.

இந்நிலையில், அட்சயாவுக்குப் பிறந்த நாளிலிருந்து இதயத்தில் பிரச்னை இருந்திருக்கிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வழியில்லாத ஜோதிமணி, `மகளை இழந்துவிடுவோமோ’ என்று கலங்கி வந்தார். அவரின் அல்லலைத் தீர்க்க முன்வந்த கரூரைச் சேர்ந்த சமூக அமைப்பு ஒன்று, சமூக வலைதளங்கள் மூலம் நிதிதிரட்டி, கடந்த வருடம் சென்னை அப்போலோவில் இதய அறுவைசிகிச்சை செய்தனர். `இன்னும் ஒரு வருடத்தில் இரண்டாவதாக ஒரு ஆபரேஷன் பண்ணணும். அப்போதான், அட்சயா முழுமையா குணமாவா’ என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டினர். 2,000 வரை கலெக்டானது. அப்போதுதான், கேரளாவை வரலாறு காணாத மழை வெள்ளம் புரட்டிப்போட்டது. 


 அட்சயா வீட்டில் மோகன் குமாரமங்கலம்(பழைய படம்)

அந்தக் கோரக்காட்சிகளை டிவியில் பார்த்த அட்சயா, `எனக்கு ஆபரேஷன் பண்ண கிடைத்த பணத்தில் 5,000 ரூபாயைக் கேரள நிவாரண நிதியா தர்றேன்’ என்று தன் தாயின் எதிர்ப்பையும் மீறி, மக்கள் பாதை என்ற அமைப்பின் மூலம் அனுப்பினார். இந்தச் சிறுமியின் மனிதாபிமானத்தைப் பார்த்து தமிழ்நாடே வியந்தது. இந்திய அளவில் மட்டுமல்ல, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனைகூட அட்சயாவுக்கு இரண்டாவது ஆபரேஷனை இலவசமாகச் செய்வதாகப் போட்டிப்போட்டுக்கொண்டு அழைத்தன. ஆனால், `முன்பு அறுவை சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவமனையிலேயே அறுவைசிகிச்சை செய்வதுதான் நல்லது’ என்று முடிவெடுத்தனர். இதற்கிடையில், சிறுமி அட்சயாவைப் பாராட்ட நினைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம், அட்சயா வீட்டுக்கு வருகை தந்தார். ``இப்படி சிறுமியைப் பெற்றதற்கு காலத்துக்கும் பெருமைப்படலாம்’’ என்று உச்சிமுகர்ந்ததோடு, அட்சயாவுக்கு 25,000 ரூபாய் நிதியுதவியையும் செய்தார். அதோடு, அட்சயாவின் இரண்டாவது இதய ஆபரேஷனுக்கான அத்தனை செலசையும் தானே ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துச் சென்றார். 

 ஆனால், `இலவசமாகவே இதய ஆபரேஷன் செய்கிறோம்’ என்று அப்போலோ நிர்வாகம் சொன்னதால், தனக்கு கலெக்டான இரண்டு லட்சம் வரையிலான நிதியைக் கிருத்திகா என்ற சிறுமியின் இதய ஆபரேஷனுக்கு வழங்கி, எல்லோரையும் ஆனந்த கண்ணீர் வடிக்க வைத்தார் அட்சயா. இந்நிலையில், கடந்த வாரம் இரண்டாவது ஆபரேஷன் செய்வதற்காகச் சென்னைக்கு அட்சயாவை அழைத்துச் சென்றனர். அங்கே எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அட்சயா பெரிய மனுஷியாகிவிட, `இப்போதைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டாம்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனால், கரூருக்குத் திரும்பினார்கள். 

இந்நிலையில், பெரிய மனுஷியான அட்சயாவுக்கு நாளை அவரது வீட்டில் பூப்பு நீராட்டு விழா நடக்க இருக்கிறது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட மோகன் குமாரமங்கலம், அட்சயாவின் தாயைப் போனில் அழைத்து, ``இந்த பங்ஷனை உங்கத் தம்பியாக இருந்தும் அட்சயாவின் தாய்மாமனாக முன்னின்றும், நானே நடத்துகிறேன். சீர் செய்கிறேன்’ என்று சொல்ல, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது அட்சயாவின் குடும்பம். அந்த மகிழ்ச்சி குறையாமல் நம்மிடம் பேசிய அட்சயாவின் தாய் ஜோதிமணி, 


 அட்சயாவோடு ஜோதிமணி

``போன வருடம் வரை, `அட்சயாவுக்கு இப்படி ஆயிட்டே. புருஷனையும் இழந்து, இப்போ புள்ளையையும் இழந்துருவோமோ?'னு கலங்கி நின்னேன். `ஏன் இந்த ஆண்டவன் தொடர்ந்து நமக்குத் துன்பத்தையே கொடுக்கிறான்’னு குமுறிப் போனேன். ஆனா, அட்சயாவால் இப்போ அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கேன். ஆண்டவன் என் மகளுக்கு பலகீனமான இதயத்தைக் கொடுத்தாலும், அடுத்தவங்களுக்கு உதவுற மனிதாபிமான இதயமா படைச்சுட்டான். அதனால்தான், இத்தனை பெருமையும் எங்களைத் தேடி வந்திருக்கு. மோகன் குமாரமங்கலம் நாளை அட்சயா சடங்குக்கு வர்றார். அவரே முன்னின்று நிகழ்ச்சியை நடத்துறதா சொல்லியிருக்கார். அட்சயாவை பெத்ததுக்காக என் வயிறு குளிர்ந்து கிடக்கு சார்’’ என்றார் நீர்த்தாரைகள் கண்களில் தெறிக்க!
  


 


[X] Close

[X] Close