ராமநாதபுரத்தில் பதுங்கி இருந்த இலங்கை வாலிபர்கள் இருவர் கைது - போலீஸ் அதிரடியால் பரபரப்பு | Two Sri Lankan youth arrested in Ramanathapuram

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (01/03/2019)

ராமநாதபுரத்தில் பதுங்கி இருந்த இலங்கை வாலிபர்கள் இருவர் கைது - போலீஸ் அதிரடியால் பரபரப்பு

இலங்கையில் நடந்த கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் வாலிபர்கள் இருவரை ராமநாதபுரம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் பதுங்கியிருந்த இலங்கை வாலிபர்கள்.
 

ராமநாதபுரம் தங்கப்பா நகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய போலீஸார், தங்கப்பா நகரில் உள்ள அந்த வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். இதில், அந்த வீட்டில் பதுங்கியிருந்த இலங்கை வாலிபர்கள் இருவர் உட்பட 4 பேர் போலீஸாரிடம் சிக்கினர்.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பைச் சேர்ந்த சங்க சிராந்தா மற்றும் சப்ராஸ் என்றும் இலங்கையில் நடந்த கொலைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்து கள்ளத்தனமாக வேதாரண்யம் வழியாக இந்தியாவிற்கு வந்தது தெரியவந்தது. கடந்த சில நாள்களுக்கு முன் ராமநாதபுரம் வந்த இவர்களுக்கு, மண்டபம் சேதுநகரில் வசித்துவரும் ரியாஸ் மற்றும் மண்டபம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முகம்மது கையூம் ஆகிய இருவரும், வீட்டு புரோக்கர் மூலம் வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்து உதவியதும் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் மீது ஏற்கெனவே கடத்தல் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த இரு வாலிபர்களுடன் ரியாஸிற்கும், முகம்மது கையூமுக்கும் ஏற்பட்ட தொடர்பு குறித்தும், தீவிரவாத அமைப்புகளுடன் இவர்கள் இருவருக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா எனக் கண்டறியும் வகையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் மத்திய மாநிலப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கையைச் சேர்ந்த நபர்கள் உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் ராமநாதபுரம் பகுதியில் பதுங்கியிருந்தது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 


[X] Close

[X] Close