கோழிப்பண்ணையின் மின்சார வேலி தாக்கி ஒருவர் பலி -சாலை மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர் | people protest against private chicken farm

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (01/03/2019)

கடைசி தொடர்பு:10:30 (01/03/2019)

கோழிப்பண்ணையின் மின்சார வேலி தாக்கி ஒருவர் பலி -சாலை மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர்

 பேருந்தை சிறைப்பிடித்த மக்கள்

கரூரில் கோழிப்பண்ணை நிர்வாகம் அமைத்திருந்த மின்சார வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி துடிதுடித்து ஒருவர் இறக்க, அந்த கோழிப்பண்ணைக்கு எதிராக மக்கள் சாலை மறியல் செய்தனர். விசயத்தைக் கேள்விப்பட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களை சமாதானப்படுத்தினார். "அமைச்சர், நாளைக்குள் கோழிப்பண்ணை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா சொல்லி இருக்கார். இல்லைன்னா,எங்க போராட்டம் அமைச்சருக்கு எதிராகவும் திரும்பும்" என்று எச்சரித்தனர் பொதுமக்கள். 


 மக்களை சமாதானப்படுத்தும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள வள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். வயது  55. விவசாயியான இவர், இன்று காலை சாலை ஓர தண்ணீர் டேங்கில் குளித்துக்கொண்டிருந்தார். பின்னர், அதனருகே இருந்த தனியார் கோழிப்பண்ணைக்குச் சொந்தமான வேலியின் அருகே சென்றபோது, அந்த வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, கரூர் வாங்கல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை மீட்ட காவல் துறையினர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதனிடையே, தனியார் கோழிப்பண்ணையில் மின் வயர்கள் சரியான பராமரிப்பில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற உயிர் இழப்புச் சம்பவங்கள் ஏற்படுவதாகக் கூறி, தனியார் கோழிப்பண்ணைக்குச் சொந்தமான பேருந்தை சிறைபிடித்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாலையில் திடீர் சாலை மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். 


 மக்கள் சாலை மறியல்

தகவலறிந்து வந்த கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் கும்பராஜா தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், பொதுமக்கள் கலைந்துசெல்ல மறுத்தனர். இதனிடையே, சம்பவத்தை அறிந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் அவர்கள் கலைய மறுத்தனர். "நாளைக்குள் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவைக்கிறேன்" என்று கூறினார். அதனைத் தொடர்ந்து,போராட்டத்தைக் கைவிட்டு,மக்கள் அமைதியாகக் கலைந்துசென்றனர். இரவு 8 மணிக்கு துவங்கிய சாலை மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம்  நீடித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நம்மிடம் பேசிய பொதுமக்களில் சிலர், "அமைச்சர் சொன்னதுபோல நடவடிக்கை எடுக்க வைப்பாரான்னு தெரியலை. ஏன்னா, அந்த கோழிப்பண்ணை உரிமையாளர் அமைச்சருக்கு வேண்டியவர்னு சொல்றாங்க. அதனால்தான், சாலைமறியல் செய்த எங்களைத் தடுக்க, அவர் ஓடோடி வந்ததா சொல்றாங்க. சொன்னபடி நாளை இரவுக்குள் நடவடிக்கை இல்லன்னா, அமைச்சருக்கு எதிராகவும் போராடுவோம்" என்றார்கள்.


 


[X] Close

[X] Close