`அல்கொய்தாவை வழிநடத்தும் பின்லேடன் மகன்; தகவல் தெரிவித்தால் ரூ.7 கோடி பரிசு’ - அமெரிக்கா அறிவிப்பு | us offers one million reward to find osama son

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:09:00 (01/03/2019)

`அல்கொய்தாவை வழிநடத்தும் பின்லேடன் மகன்; தகவல் தெரிவித்தால் ரூ.7 கோடி பரிசு’ - அமெரிக்கா அறிவிப்பு

ஒசாமா பின்லேடனின் மகன் குறித்த தகவல் தெரிவித்தால் 7 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஹம்சா பின்லேடன்

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் குறித்து தகவல்கள் வெளியுலகுக்கு தெரியவந்தது. அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான பின்லேடனை இந்தத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக அறிவித்தது அமெரிக்க அரசு. பின்லேடன் குறித்த தேடுதல் வேட்டையில் அமெரிக்கா தீவிரம் காட்டியது. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பின்லேடன் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவின் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்காவின் அதிரடிப்படை வீரர்கள் கடந்த 2011 மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றனர்.

அதன் பின்னர் அல்கொய்தா அமைப்பை பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் (Hamza Bin Laden) வழிநடத்திவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் ஹம்சா பின்லேடன் குறித்த தகவல்களைத் தெரிவித்தால் 1 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி) சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா

இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள், ``ஹம்சா பின்லேடன் தனது ஆதரவாளர்களுக்கு இணையதளம் மூலம் தெரிவித்த ஆடியோ மற்றும் வீடியோவில் அமெரிக்கா மீதும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் மற்ற நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்த வேண்டும் எனப் பேசியுள்ளான். ஹம்சா பின்லேடனை உலகளாவிய பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹம்சா ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பகுதியில் பதுங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. அங்கிருந்து இரானுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளான். பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கும். அல்கொய்தா தலைவர்கள் அவர்கள் செய்த காரியத்திற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். கடந்த சில காலங்களாக அல்கொய்தா அமைதியாகத்தான் இருக்கிறது. அவர்கள் சரணடைய மறுக்கிறார்கள். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இராணுவ நடவடிக்கையின் மூலம் சிரியா, சோமாலியா பகுதிகளில் இருக்கும் அல்கொய்தா பயங்கரவாதிகளை அழித்து வருகிறோம்” என்றார்.

 


[X] Close

[X] Close