`ஒரு துண்டுச்சீட்டு கொடுத்தா போதும்!’ -முதல்வரைப் புகழ்ந்துதள்ளிய அமைச்சர் கருப்பணன் | minister karuppannan appreciates cm edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (01/03/2019)

கடைசி தொடர்பு:09:40 (01/03/2019)

`ஒரு துண்டுச்சீட்டு கொடுத்தா போதும்!’ -முதல்வரைப் புகழ்ந்துதள்ளிய அமைச்சர் கருப்பணன்

எடப்பாடி பழனிசாமி

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத் திறப்பு விழா, பல்வேறு புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்-28) ஈரோட்டிற்கு வந்திருந்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கருப்பணன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் ஈரோடு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஒருசில முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். அப்படியிருக்,க மைக் பிடித்து பேச ஆரம்பித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாண்புமிகு புரட்சித்தலைவி, இதயதெய்வம் அம்மா என ஜெயலலிதாவில் ஆரம்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை விதவிதமான அடைமொழிகளோடு துதி பாடினார். அதனையடுத்து, ‘பள்ளிக் கல்வித் துறையிலே அளப்பறிய சாதனைகளைப் படைத்து, இன்றைக்கு வாழும் காமராஜராகப் போற்றப்படும் அண்ணன் செங்கோட்டையன் அவர்களே!’ என கருப்பணன் புகழ்ந்து தள்ள, அதுவரை அமைதியாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடுக்கிட்டு, ‘என்னது வாழும் காமராஜரா... பயங்கரமா புகழ்ந்து தள்ளுறாரே!’ என அருகிலிருந்த அமைச்சர் செங்கோட்டையனிடம் குலுங்கிக் குலுங்கி சிரித்தார். 

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய அமைச்சர் கருப்பணன், ‘இரண்டே நிமிடத்தில் எந்த ஒரு முதலமைச்சரையும் இந்தியாவிலேயே பார்க்க முடியாது. ஆனால், அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்திக்க ஒரு துண்டுச்சீட்டை கொடுத்து அனுப்பினால் போதும், அடுத்த இரண்டே நிமிடத்தில் அவரை சந்தித்துப் பேசலாம். ஒரு சின்னக்குழந்தை முதலமைச்சரை சந்திக்கச் சென்றால்கூட, என்ன வேண்டுமெனக் கேட்டு சந்தோஷமாக அனுப்பிவைக்கிறார். அந்த அளவிற்கு மக்களிடம் இன்றைக்கு முதலமைச்சர் நெருக்கமாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், பொங்கலை சிறப்பாகக் கொண்டாட பொங்கல் பொருள்களோடு நூறு ரூபாயை இலவசமாகக் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு அண்ணன் எடப்பாடி பழனிசாமி, பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுத்து, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆட்சிசெய்துவருகிறார்” என்றார்.

 


[X] Close

[X] Close