360 காளைகள்... 186 மாடுபிடி வீரர்கள் - களைகட்டிய சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு! | Jallikattu held in namakkal district

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (01/03/2019)

கடைசி தொடர்பு:12:15 (01/03/2019)

360 காளைகள்... 186 மாடுபிடி வீரர்கள் - களைகட்டிய சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு!

நாமக்கல் அருகே உள்ள சேந்தமங்கலத்தில், நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 360 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டித் தள்ளியதில் ஊர்க்காவல்படை வீரர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், ஜல்லிக்கட்டு  நடைபெற்றது. பங்கேற்ற அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத் துறையினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு, மாடுபிடி வீரர்கள் அனைவரும் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், சந்திரசேகரன் எம்.எல்.ஏ ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, கோயில் மாடுகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன. 

காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து வெளியேவிடப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசுகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல், ஜல்லிக்கட்டில் அடக்க முடியாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த காளைகள் மட்டுமின்றி திருச்சி, தம்மம்பட்டி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 360 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க, சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 186 மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் இருந்தனர். 

ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க, அங்கேயே மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மாடுகள் முட்டி காயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் பொட்டிரெட்டிப்பட்டி சதீஷ்குமார், தொண்டமான்பட்டி கலைச்செல்வன், காளைகளின் உரிமையாளர்கள் கெஜகோம்பை கதிர்வேல், நாரைக்கிணறு குப்புசாமி, பழையபாளையம் சேது மற்றும் ஊர்க்காவல் படை வீரர் பிரசன்னா ஆகிய 6 பேருக்கும் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டை காண சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்திருந்தனர்.இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு, மதியம் 2.30 மணி அளவில் முடிந்தது. இருப்பினும், போதிய நேரம் இல்லாததால் 20-க்கும் மேற்பட்ட காளைகள் திருப்பிஅனுப்பப்பட்டன. இதனால் காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close