மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - திருச்சியில் பள்ளித் தாளாளருக்கு எதிராகக் கொந்தளித்த பெற்றோர்! | child abuse case against trichy School Correspondent

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (01/03/2019)

கடைசி தொடர்பு:13:25 (01/03/2019)

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - திருச்சியில் பள்ளித் தாளாளருக்கு எதிராகக் கொந்தளித்த பெற்றோர்!

65 வயதான பள்ளித் தாளாளர் ஒருவர், தங்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவிகள் பலரை சீண்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

திருச்சி கருணைப்புரி பள்ளி

திருச்சி சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் பகுதியில் இயங்கிவரும் லாதியான் இவான்ஜலின் லுத்ரன் சர்ச் துவக்கப் பள்ளியில் உள்ள விடுதியில், சுமார் 55-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கிப் படித்துவருகிறார்கள்.

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் இருந்து கண்டறியப்பட்ட ஏழை எளிய மாணவர்களை அழைத்துவந்து, இங்குள்ள விடுதியில், பள்ளியில் இலவசமாகப் படிக்கவைத்துவருகிறார்கள். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும்  இப்பள்ளியில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற ஆசிரியரான திருச்சியைச் சேர்ந்த தர்மராஜ், பள்ளியின் தாளாளராக நியமிக்கப்பட்டார். இவர்தான், பள்ளியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இவரின் அறையை மாணவிகளைச் சுத்தம்செய்யச் சொல்வது, தண்ணீர் கொண்டுவருவது போன்ற வேலைகளைச் செய்ய வைப்பதாகவும் மாணவிகளைத் தனியாக அழைத்து கதைகள் சொல்வது, இனிப்பு வழங்குவது போல் அவர்களிடம் அத்துமீறி நடப்பதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஏழை மாணவிகள் என்பதால், அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரின் செயலால் அதிர்ச்சியடைந்த மாணவிகளை மிரட்டிப் பணிய வைத்ததாகவும், தனது பாலியல் சீண்டல்கள் குறித்து வெளியில் சொன்னால், சம்பந்தப்பட்டவர்களைப் பள்ளியிலிருந்து நீக்கி, வேறு எங்கும் படிக்க முடியாதபடி செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், சில மாணவிகள் பயத்தில் வெளியில் சொல்லாமல் இருந்துவந்தனர்.

முற்றுகைப் போராட்டம்

நிலைமை இப்படியிருக்க, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, பள்ளியின் தாளாளர் தர்மராஜ், கடலூர் மாவட்டத்திலிருந்து வந்து விடுதியில் தங்கிப் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் அத்துமீறியதாகவும், இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்த மாணவிகள் அந்த மாணவியைக் காப்பாற்றி, இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மாணவியின் தந்தை, தனது மகளின் நிலைமைகுறித்து விசாரித்துள்ளார்.

 அப்போது அங்கு படிக்கும் மற்ற மாணவிகள், பள்ளித் தாளாளர் தர்மராஜனின் செயல்குறித்து விளக்கியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் புகாரை வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் தகவல் பரவிடவே, அப்பகுதியில் உள்ள கிராமப் பொதுமக்கள் திரண்டுவந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

பள்ளி தாளாளர் தர்மராஜ் 

இதையடுத்து, தகவல் அறிந்த லால்குடி ஆர்டிஓ பாலாஜி, மண்ணச்சநல்லூர் சமூக நலத்துறை தாசில்தார் சாந்தி  மற்றும் போலீஸார் அங்கு வந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவிகள் கூறிய அனைத்தும் உண்மை என்பது தெரியவந்ததையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் உத்தரவின் பேரில், லால்குடி மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தர்மராஜனைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர் தர்மராஜா தலைமறைவாகி விட்டதாகத் தகவல் வெளியாகவே,  அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

போலீஸ் விசாரணையை அடுத்து, அந்தப் பள்ளி விடுதியில் தங்கியிருந்த குழந்தைகள், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  காப்பகம் பூட்டப்பட்டது. இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடன் பேசியபோது, ``காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்” என்பதோடு முடித்துக்கொண்டனர். 

 65 வயதான பள்ளித் தாளாளர் ஒருவர், விடுதியில் தங்கிப் படிக்கும் அப்பாவி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close