`விருதுநகரில் களமிறங்குகிறாரா குஷ்பு?” -சர்ச்சையைக் கிளப்பும் சமூக அமைப்புகள் | nadar association protest against actress khushboo contest from virudhunagar constituency

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:10:25 (16/03/2019)

`விருதுநகரில் களமிறங்குகிறாரா குஷ்பு?” -சர்ச்சையைக் கிளப்பும் சமூக அமைப்புகள்

தூத்துக்குடியில் கனிமொழி, திருச்சியில் வைகோ எனத் தலைவர்கள் களமிறங்கும் நட்சத்திர தொகுதிகளின் பட்டியலில் விருதுநகரும் இடம்பிடித்துவிடும்போல. விருதுநகரைக் குறிவைத்து, துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்தரநாத் குமார் விருப்பமனு செய்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடிகை குஷ்பு களமிறக்கப்படலாம் என்று சத்தியமூர்த்திபவனில் செய்தி இறக்கை கட்டிப் பறக்கிறது. 

குஷ்பு

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி, சேலம் உள்ளிட்ட தொகுதிகளைக் குறிவைத்து, தி.மு.க-வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. விருதுநகர் தொகுதியை முன்னாள் எம்.பி மாணிக் தாகூர் எதிர்பார்த்த நிலையில், அத்தொகுதியை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பூவுக்கு ஒதுக்கலாம் என்று சத்தியமூர்த்திபவனில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். 

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளராக அறியப்படும் குஷ்பு, சமீபத்தில் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசருடன் நேரடி மோதல் போக்கைக் கையாண்டவர். தற்போது, கே.எஸ்.அழகிரி  தலைவர் பொறுப்பேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து கோஷ்டிகளுக்கும் தலா ஒரு சீட்'டை ஒதுக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வகையில், இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்புவுக்கு விருதுநகர் தொகுதியை ஒதுக்க, சத்தியமூர்த்திபவனில் காய் நகர்த்தப்பட்டு வருகிறதாம். இதற்கு, நாடார் அமைப்புகளிடமிருந்து கண்டனமும் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நாடார் மகாஜன சபைத் தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன் நாடார், கார்த்திகேயன் நாடார்"காமராஜர் பிறந்து வளர்ந்த விருதுநகர் மண்ணில் நடிகை குஷ்பு போட்டியிடப் போவதாக வரும் செய்திகள் நாடார் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. ஒருவேளை அவருக்கு சீட் வழங்கப்பட்டு, விருதுநகர் தொகுதியில் களமிறக்கப்பட்டால், நாடார் மக்களின் எதிர்ப்பை மற்ற தொகுதிகளுக்கும் சேர்த்து காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்." என்று கொதித்தார்.

குஷ்பு தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், "அவர் போட்டியிடப் போவதாக எங்கும் கூறவில்லையே? பிறகு எதற்காக இந்த வீண் வதந்தியைப் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. திருநாவுக்கரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் பரப்புரைக் குழுவில் குஷ்பு உறுப்பினராக உள்ளார். கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறார். சிலர் அவரை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவதற்காகவே இதுபோன்ற செய்திகளைப் பரப்புகிறார்கள்" என்றனர்.

 

 


[X] Close

[X] Close