குடும்பத்தினருடன் அமைதியான முறையில் பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலின்! | stalin birthday celebration in neelankarai

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (01/03/2019)

கடைசி தொடர்பு:14:05 (01/03/2019)

குடும்பத்தினருடன் அமைதியான முறையில் பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலின்!

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவடையாததால், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ரத்துசெய்துள்ளார். அவர், ஊட்டி சென்றுள்ளதாகத் தகவல் பரவிய நிலையில், நீலாங்கரையில் உள்ள தனது மகன் உதயநிதியின் பண்ணை வீட்டில் ஸ்டாலின் ஓய்வெடுப்பதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1-ம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக தி.மு.க-வினர் கொண்டாடுவது வழக்கம். தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின் வரும் முதல் பிறந்தநாள் இது. தனது பிறந்தநாள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், "இயற்கையின் சதியால் தலைவர் கலைஞர் நம்மோடு இல்லை. அவரிடம் வாழ்த்து பெறுகின்ற வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. அதனால்தான், பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். நேரில் வந்து வாழ்த்துவதைத் தொண்டர்கள் தவிர்த்திடுங்கள். பேனர்களோ, ஆடம்பர விழாக்களோ வேண்டாம். ப்ளஸ் டூ பொதுத்தேர்வு நேரம் என்பதால், ஒலிபெருக்கிகள் கட்டக் கூடாது.  40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறித்துத் தாருங்கள். அதுவே, எனக்கு நீங்கள் தருகின்ற விலைமதிப்பில்லா பிறந்தநாள் பரிசு'' என்று கூறியுள்ளார்.

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்தால், தனது வேண்டுகோளையும் மீறி நிர்வாகிகளும், தொண்டர்களும் படையெடுப்பார்கள் என்று கருதிய ஸ்டாலின், ஊட்டிக்குப் பயணப்பட இருப்பதாகச் செய்தி பரவியது. இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள தனது மகன் உதயநிதியின் இல்லத்தில் பேரக் குழந்தைகளுடன் பிறந்தநாள் பொழுதை ஸ்டாலின் கழித்துவருவதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீலாங்கரை பண்ணை வீட்டில், இன்று காலை சிறப்பு சிற்றுண்டியுடன் தொடங்கிய ஸ்டாலினின் 66-வது பிறந்தநாள் கொண்டாட்டம், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் செல்வதாக ஸ்டாலினுக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.


[X] Close

[X] Close