`160 கட்சிகளில் நாங்கள் வேற மாதிரி' - தமிழகத்தில் உருவானது புதிய கட்சி! | another new political party starts in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (01/03/2019)

கடைசி தொடர்பு:16:50 (01/03/2019)

`160 கட்சிகளில் நாங்கள் வேற மாதிரி' - தமிழகத்தில் உருவானது புதிய கட்சி!

மிழகத்தில் தேர்தல் கூட்டணிகள் ஒரு பக்கம் விமர்சனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்க மற்றொரு புறம் தமிழகத்தில் புதியக் கட்சிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தேர்தல் காலங்களில் மட்டும் செயல்படும் லெட்டர் பேட் கட்சிகள் இப்போது மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளன. தேர்தல் தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு நாளும் ஒரு கட்சி புதியதாய் உதயமாகின்றது. இந்த நிலையில் ``தேசிய முற்போக்கு தமிழர் கழகம்'' என்ற புதிய கட்சியை வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தொடங்கி கட்சியின் பெயரையும் கொடியையும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

புதியக் கட்சியை அறிமுகப்படுத்திய சார்லஸ்

கட்சியை அறிமுகப்படுத்திப் பேசிய சார்லஸ் அலெக்சாண்டர், ``தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகள் நடந்த திராவிட ஆட்சியில் நீர் மேலாண்மையில்லாமல், ஊழல்கள் பெருகி தமிழ்நாடு வீணானது தான் மிச்சம். இதில் மாற்றத்தைக் கொண்டுவர தான் ஏற்கெனவே நாங்கள் சமூகநீதி வழக்கறிஞர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றோம். இந்த அமைப்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளாகத் தேசிய முற்போக்கு தமிழர் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளோம். தமிழகத்திலிருந்து இதுவரை 160 கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு கட்சியாக இல்லாமல் சிறந்தக் கட்சியாக செயல்படும். தமிழர் பண்பாட்டை பாதுகாப்பது, மதவாதத்தை எதிர்ப்பது உள்ளிட்ட 20 கொள்கைகளை முன்நிறுத்தி முதல் ஐந்தாண்டுகள் களப்பணி மேற்கொள்ளப் போகின்றோம்” என்றார்.

அதன் பின்னர் உங்கள் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளனர் எனச் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தவர், ``பத்திரிகையாளர் சந்திப்பு என்பதால் நான்கு பேர் மட்டும் வந்துள்ளோம், அடுத்தகட்டமாக கட்சியை டெல்லியில் பதிவு செய்துவிட்டு , உறுப்பினர் படிவம் தயார் செய்து தமிழகம் முழுவதும் உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளோம்” என்றார். 


[X] Close

[X] Close