ஏமாற்றிய பணத்தில் கார் பிசினஸ் - மோசடிக் கும்பல் தலைவனின் ப்ளான்  | Police arrest fraud gang near chennai

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (01/03/2019)

கடைசி தொடர்பு:17:51 (01/03/2019)

ஏமாற்றிய பணத்தில் கார் பிசினஸ் - மோசடிக் கும்பல் தலைவனின் ப்ளான் 

சென்னையில் 10 இடங்களில் கால்சென்டர்களை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடிக் கும்பலிடமிருந்து 3 ஆடி கார்கள், ஒரு பி.எம்.டபுள்யூ கார் உட்பட 13 சொகுசுக் கார்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

மோசடி கும்பலின் தலைவனுக்கு உதவிய கீதா

சென்னையில் 10 இடங்களில் கால் சென்டர்களை நடத்தி லோன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பல லட்ச ரூபாயை  சுருட்டிய மோசடிக் கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மோசடிக் கும்பலின் தலைவனை போலீஸார் தேடிவருகின்றனர். துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மோசடி கும்பல்

இந்த வழக்கில் கைதான வெங்கடேசன், விக்னேஷ், பூபதி, சார்லஸ், ஜான்சன் ஆகியோரை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சென்னையில் கால் சென்டர்களை நடத்தி, லோன் வாங்கித் தருவதாக பலரை நாங்கள் ஏமாற்றியதை கைதானவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் 3 ஆடி கார்கள், ஒரு பி.எம்.டபுள்யூ கார் உட்பட 13 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

 மோசடி கும்பல்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கால் சென்டர்களை நடத்திய கும்பல் அதன் மூலம் பலரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயை சுருட்டியுள்ளனர். அந்தப் பணத்தை கார்களை வாங்கி விற்கும் தொழிலில் முதலீடு செய்துள்ளனர். மேலும், மோசடிக் கும்பலின் தலைவன், சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கேசினோ போன்ற கோடீஸ்வரர்கள் விளையாடும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது எங்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ஆடி, பி.எம்.டபுள்யூ போன்ற சொகுசு கார்களில் வலம் வந்து கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

மோசடி கும்பல்

கும்பலின் தலைவனுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளோம்.  கைதானவர்களின் 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளோம். எவ்வளவு ரூபாய் ஏமாற்றினார்கள் என்ற விவரங்களை சேகரித்துவருகிறோம். மேலும், கைதானவர்களிடமிருந்து ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளோம்.

அந்தக் கும்பலின் தலைவர் போலீஸுக்குப் பயந்து வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரை சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துவருகிறோம். கும்பலின் தலைவனுக்குப் பின்னணியில் சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளனர். கால் சென்டரில் மோசடி செய்து சம்பாதித்த பணத்தை கார் பிசினஸில் முதலீடு செய்துள்ளார். இதனால் கும்பலின் தலைவன் பிடிபட்டால் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சிக்குவார்கள்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்களில் பிரஸ் மற்றும் வழக்கறிஞர்களின் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளன. இந்த ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருப்பதால் காவல்துறையினரின் சோதனையிலிருந்து மோசடிக் கும்பல் தப்பிவந்துள்ளது. தற்போது மோசடிக் கும்பலுக்கு ஆதரவாக சிலர் சிபாரிசு செய்கின்றனர். இருப்பினும் சட்டம் தன்னுடைய கடமையைச் செய்யும். இந்த வழக்கில் இதுவரை 10 பேரை கைதுசெய்துள்ளோம். கைதானவர்களில் கணவன், மனைவி உள்ளனர். அவர்களின் பெயர் உமாபதி, கீதா. இவர்கள் இருவரும் கும்பலின் தலைவனுக்கு உறுதுணையாக இருந்துவந்துள்ளனர்.

மோசடி கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டவைகள்

அடுத்து சதீஷ் என்பவரும் சிக்கியுள்ளார். அவர்களிடம் விசாரித்தபோது கால்சென்டர் குறித்து இன்னொரு முக்கிய தகவல் கிடைத்தது. அதாவது, கால் சென்டர் மூலம் கிடைக்கும் பணத்தை கும்பலின் தலைவனுக்கு கொடுக்க தனி நெட்வொர்க் ஒன்று செயல்பட்டுள்ளது. அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கும்பலின் தலைவனின் முகமோ அவர் குறித்த எந்தவித தகவல்களும் தெரியாது. தற்போது கும்பலின் தலைவன் பதுங்கியிருக்கும் ரகசிய இடம் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் விரைவில் அவரைக் கைது செய்வோம்" என்றார். 


[X] Close

[X] Close