தென் சென்னை தொகுதிக்கு `செக்’ -தூத்துக்குடியில் களமிறங்கும் தமிழிசை? | Was tamilisai going to contest in thoothukudi constituency?

வெளியிடப்பட்ட நேரம்: 07:31 (02/03/2019)

கடைசி தொடர்பு:08:12 (02/03/2019)

தென் சென்னை தொகுதிக்கு `செக்’ -தூத்துக்குடியில் களமிறங்கும் தமிழிசை?

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் பா.ம.க கூட்டணியில், பா.ஜ.க-விற்கு தென் சென்னை தொகுதி ஒதுக்குவதில் அமைச்சர் ஜெயக்குமார் உடன்படாததால், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தமிழிசை செளந்தரராஜன் முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் பரவிவருகின்றன.

தமிழிசை

நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிகளிலும், கூட்டணியில் இணைந்த கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டணியில் பா.ஜ.க-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, வட சென்னை, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளை ஒதுக்குவதாக அ.தி.மு.க தரப்பில் முதலில் கூறப்பட்டதாம். ஆனால் பா.ஜ.க, இதை ஏற்க மறுத்து கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தென் சென்னை மற்றும் ராமநாதபுரம் அல்லது திருச்சி ஆகிய 5 தொகுதிகளைக் கேட்டுள்ளது.

இதில், பா.ஜ.க-வைப் பொறுத்தவரை தென் சென்னை தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. அவ்வகையில், தென் சென்னை தொகுதியில் பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்தராம். ஆனால், தென் சென்னை தொகுதியின் எம்.பி-யாக உள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அ.தி.மு.க தரப்பில் கூறப்பட்டது.

கனிமொழி

தமிழிசை தரப்பில் மீண்டும் தென் சென்னை தொகுதி கேட்டதும்,  தென் சென்னை தொகுதிக்குப் பதிலாக வடசென்னைத் தொகுதியை எடுத்துக்கொள்ளுமாறு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பு கேட்டும், தென் சென்னை தொகுதியை பா.ஜ.க-விற்கு விட்டுத்தர மறுத்துவிட்டாராம் அமைச்சர் ஜெயக்குமார். இதனால், ஒ.பி.எஸ், இ.பி.எஸ்ஸின்  வேண்டுகோளை ஏற்று, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தமிழிசை முடிவுசெய்துள்ளதாக பா.ஜ.க-வில் பரவலாகப் பேசப்படுகிறது.

தூத்துக்குடி தொகுதியில், தி.மு.க சார்பில் கனிமொழி போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியாகிவிட்டதாகத் தகவல் வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டங்களிலில், தி.மு.க சார்பில் இதுவரை நடைபெற்ற அனைத்து ஊராட்சி சபைக் கூட்டங்களிலும்  மக்களிடம்  குறைகளைக் கனிமொழி  கேட்டுவருகிறார். அத்துடன், கிராமங்களில் நலத்திட்டங்களைத் துவக்கிவைத்தும், கல்லூரிகளில் மாணவர்களிடம் கலந்துரையாடல், கோலப் போட்டிகள், கபடிப் போட்டி  நடத்தியும், அனைத்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தல் என  தொகுதியில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில், கோவில்பட்டியில் பா.ஜ.க-வின் பைக் பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழிசை நினைப்பதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் கனிமொழி  களம் இறங்குவதால், ஸ்டார் தொகுதியாக மாறப்போகும் நிலையில், பா.ஜ.க சார்பில் தமிழிசையும் களம் இறங்கினால் தொகுதி களைகட்டும் என்பதே உண்மை.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close