`இப்படி நடக்கும்னு கனவில்கூட நினைக்கல!'- ராமதாஸிடம் கண்கலங்கிய குருவின் மைத்துனர் | Guru relative met Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (02/03/2019)

கடைசி தொடர்பு:11:40 (02/03/2019)

`இப்படி நடக்கும்னு கனவில்கூட நினைக்கல!'- ராமதாஸிடம் கண்கலங்கிய குருவின் மைத்துனர்

குருவின் மைத்துனரான பொறியாளர் கருணாகரன், பா.ம.க நிறுவனர் ராமதாஸை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்திப் பேசியுள்ளார். அப்போது, ராமதாஸிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

ராமதாஸை சந்தித்துப் பேசிய குருவின் மைத்துனர் கருணாகரன்

இந்த சந்திப்புகுறித்து ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில், "மறைந்த குருவின் மூத்த சகோதரி செல்வியின் கணவரும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான கருணாகரன், நேற்று (01.03.2019) தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் என்னை சந்தித்துப் பேசினார். அப்போது, குரு குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து நிறைய விசயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

குருவின் பெருமைக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரது மற்றொரு சகோதரியின் கணவர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும், மற்றவர்களும் செயல்படுவதை எண்ணி தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும், இதுபோன்று நடக்கும் என்று தாம் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் பொறியாளர் கருணாகரன் மிகவும் மனம் நொந்து என்னிடம் கூறினார்.

காடுவெட்டி குரு

குருவின் மகள் விருதாம்பிகையின் திருமணம்குறித்து, அந்தக் குடும்பத்தின் முக்கிய நபர்களான குருவின் மனைவிக்கும், தமக்கும் தெரியாது என்றும் வேதனையுடன் கூறினார். குருவின் மனைவியை விரட்டியடித்துவிட்டு, அவர்களின் சொத்துக்களைப் பறித்துக்கொள்ள அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் பொறியாளர் கருணாகரன் கூறினார்.

குரு மீது மரியாதையும், அவரது குடும்பத்தினர் மீது அக்கறையும் கொண்டுள்ள பொறியாளர் கருணாகரன், என்னிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். குருவின் மகன் கனலரசனை சீரழித்துவிட்டதாகவும், தமக்கு எதிராகப் பின்னப்படும் சதி வலையை அவனே உணர்ந்து திருந்தாதபட்சத்தில், அவனையும், அவனது எதிர்காலத்தையும் யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் வேதனைப்பட்டார். ஒருவேளை கனலரசன் அவனது தவறுகளை உணர்ந்து, திருந்திவந்து உங்களிடம் தஞ்சமடைந்தால், அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சகோதரி திருமணத்தில் குருவின் மகன் கனலரசன்

அதைக்கேட்ட நான், குருவின் மகன்மீது நானும், அன்புமணியும் மிகுந்த அக்கறைகொண்டிருப்பதாகத் தெரிவித்தேன். குருவின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் கனலரசனை அன்புமணி அழைத்து, அவனது கல்வி மற்றும் எதிர்காலம்  குறித்து 2 மணி நேரம் பேசியதாகவும், குருவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சிறப்பாகப் படித்து மருத்துவர் ஆக வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தேன். கனலரசன் திருந்தி வந்தால், அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நானும், அன்புமணியும் காத்திருப்பதாகவும் கருணாகரனிடம் உறுதியளித்தேன்.

அதற்காக எனக்கு நன்றி தெரிவித்த குருவின் மைத்துனரான பொறியாளர் கருணாகரன், கலங்கிய கண்களுடன் என்னிடம் விடைபெற்றுச் சென்றார்" என்று தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close