`சத்தியமா என்னால முடியல, ப்ளீஸ் சவிதா!'- கொலை செய்த கால்டாக்ஸி டிரைவர் கதறல்  | Call Taxi Driver Killed 45 years old Women in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (02/03/2019)

கடைசி தொடர்பு:12:40 (02/03/2019)

`சத்தியமா என்னால முடியல, ப்ளீஸ் சவிதா!'- கொலை செய்த கால்டாக்ஸி டிரைவர் கதறல் 

கொலை செய்யப்பட்ட ரேவதி

சென்னை கிண்டியில் நிச்சயம் செய்த பிறகு நடவடிக்கை சரியில்லை எனக் கூறி திருமணத்தை நிறுத்திய ஆத்திரத்தில் பெண்ணை கால் டாக்ஸி டிரைவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை கிண்டியைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி ரேவதி (45). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ராமசந்திரன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரேவதி தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இந்தநிலையில் வேலை முடிந்து நேற்றிரவு 8 மணியளவில் ரேவதி வீடு திரும்பினார். கிண்டி வண்டிக்காரன் தெருவில் அவர் வந்தபோது வாலிபர் ஒருவர் வழிமறித்துள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வாலிபர், ரேவதியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து அந்த வாலிபர், நண்பரின் பைக்கில் தப்பினார். இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். கொலை நடந்த இடம் கிண்டி வண்டிக்காரன் தெரு என்பதால் வேளச்சேரி, கிண்டி காவல் நிலையங்களுக்கிடையே எல்லைப் பிரச்னை எழுந்தது. இதனால் ஒன்றரை மணி நேரமாகியும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதையடுத்து ரேவதியின் சடலத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொலை செய்யப்பட்ட ரேவதியின் சடலம்

இந்தத் தகவல் போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குத் தெரியவந்ததும் கிண்டி சரக காவல்துறை அதிகாரிகளிடம் உயரதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அதன்பிறகே சம்பவ இடத்துக்கு கிண்டி சரக காவல்துறை அதிகாரிகள் வந்தனர். ரேவதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கிண்டி போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ரேவதியின் மகள் சவிதா (20) (பெயர் மாற்றம்). இவர் கல்லூரியில் படித்துவருகிறார். இவரை பெண் பார்க்க சில மாதங்களுக்கு முன் கிண்டி மசூதி காலனியைச் சேர்ந்த வினோத் (27) வந்தார். வினோத், கால்டாக்ஸி டிரைவராக உள்ளார். இருவீட்டினரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் சவிதாவுக்கும் வினோத்துக்கும் நடந்துள்ளது. அதன்பிறகு வினோத்தின் நடவடிக்கைகள் பிடிக்காத ரேவதி, தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததோடு அதை நிறுத்தியும் உள்ளார். இதனால் ரேவதி குடும்பத்தினருக்கும் வினோத் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. 

 கொலை செய்யப்பட்ட ரேவதியின் சடலம்

இதையடுத்து ரேவதி, கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கல்லூரிக்குச் செல்லும் தன்னுடைய மகளுக்கு வினோத் தொல்லை கொடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வினோத்திடம் விசாரணை நடத்திய போலீஸார் அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். அதன்பிறகும் வினோத், சவிதாவை மறக்க முடியாமல் தவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் சவிதா சென்னையில் இருந்தால் வினோத்தால் தொல்லை வரும் எனக்கருதிய ரேவதி, மகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இதனால் சவிதாவைப் பார்க்க முடியாமல் வினோத் தவித்தார். 

 இதையடுத்து நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற ரேவதியை வழிமறித்து சவிதா குறித்த தகவல்களைக் கேட்டுள்ளார். அப்போது `உனக்குதான் என் மகளை திருமணம் செய்து கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டனே, அதன்பிறகு ஏன் எங்களை தொல்லை செய்கிறாய்' என்று கேட்டுள்ளார். அதற்கு வினோத், `உங்கள் மகளை என்னால் மறக்க முடியவில்லை. அவளை திருமணம் செய்து உங்கள் கண் முன்னாலேயே நல்லபடியாக வாழ்ந்து காட்டுகிறேன்' என்று கெஞ்சியுள்ளார். ஆனால், ரேவதியோ, `நீ எனக்கு தொல்லை கொடுத்தால் போலீஸிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன். மேலும் உனக்கு என் மகளை கட்டித்தர மாட்டேன்' என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேவதியின் கழுத்து, வாய், மார்பு, கை எனப் பல இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு நண்பனின் பைக்கில் தப்பிவிட்டார். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொலை செய்தது வினோத் என்பதை உறுதி செய்தோம். பிறகு வினோத்தின் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த அவரை கைது செய்துள்ளோம். கொலை செய்த பிறகு வினோத்தை பைக்கில் அழைத்து சென்றவரிடமும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 
 கொலை செய்த வினோத்
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ரேவதி கொலை வழக்கில் தன்னுடைய நண்பனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என வினோத் எங்களிடம் கூறியுள்ளார். இதனால் வினோத்தின் நண்பன் இந்த வழக்கில் சேர்க்கப்படுவாரா என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். மேலும் ரேவதியின் மகள் சவிதாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். கொலை நடந்ததும் வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொலை நடந்த இடம் கிண்டி காவல் நிலைய எல்லைப்பகுதி என்பதால் கிண்டி போலீஸார் விசாரித்துவருகின்றனர். இதனால் ரேவதியின் சடலம் காலதாமதமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம் "என்றார். 

இதற்கிடையில் வினோத் கதறி அழுதபடி பேசிய வீடியோ ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், `சவிதா... சவிதா... சத்தியமா என்னால முடியல... ப்ளீஸ் சவிதா' என்று அழுகிறார். ரேவதி கொலை செய்யப்பட்டுள்ளதால் அவரின் இரண்டு பெண் குழந்தைகள் அநாதையாகியுள்ளனர். ரேவதியின் சடலத்தைப் பார்த்து அவர்களும் உறவினர்களும் கதறி அழுதனர். என்னைப் பெண் பார்க்க வந்த வினோத் இப்படிச் செய்வார் என்று கனவில்கூட நினைக்கவில்லை என சவிதா கதறி அழுத சம்பவம் அந்தப் பகுதியில் உள்ளவர்களை கண் கலங்க வைத்தது. 

நிச்சயம் நடந்த பிறகு பெண் தர மறுத்த ஆத்திரத்தில் பெண்ணை கால் டாக்ஸி டிரைவர் கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


[X] Close

[X] Close