`அவர நம்பிப் போகாதீங்கண்ணே... இப்போ நடுத்தெருவுல நிற்கிறீங்க!' - டி.டி.வி-யை விமர்சித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ | 'Do not trust him -AIADMK MLA criticizing TTV

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (02/03/2019)

கடைசி தொடர்பு:14:05 (02/03/2019)

`அவர நம்பிப் போகாதீங்கண்ணே... இப்போ நடுத்தெருவுல நிற்கிறீங்க!' - டி.டி.வி-யை விமர்சித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ

``தினகரனை நம்பிப் போகாதீர்கள் என்று நான் முன்பே சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறது. இதற்கு காரணம் டிடிவி தினகரன்'' என ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ சரமாரியாகத் தாக்கிப் பேசினார்.

 அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் அ.தி.மு.க சார்பில் நடைபெற்றது. இதில் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் இராம.ஜெயலிங்கம் எனப் பலர் கலந்துகொண்டனர்.

எம்எல்ஏ இராம.ஜெயலிங்கம் பேசுகையில், ``அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பதற்கு டி.டி.வி.தினகரனே காரணம். நாங்கள் எத்தனையோ முறை சொல்லிவிட்டோம் தினகரனை நம்பிப் போகாதீர்கள் என்று. தற்போது யார் நடுத்தெருவில் நிற்பது. இவரை யாரும் நம்பிப் போகாதீர்கள். போனால் செல்லாக் காசாக மாறிவிடுவீர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நடந்ததோ அதுதான் வரக்கூடிய தேர்தலிலும் நடக்கும் என நாங்கள் சொல்லவில்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலினின் சொந்த அண்ணன் அழகிரி கூறுகிறார். தமிழகத்தில் தற்போது மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். அதற்குக் காரணம் அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியால் முடியும்'' என்று பேசினார்.

அடுத்ததாக அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், ``டி.டி.வி.தினகரன் ஸ்டாலினோடு சேர்ந்துகொண்டு அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்கலாம் எனக் கனவு காண்கிறார். அது ஒரு போதும் நடக்காது. டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் அல்ல. மாற்றுக்கட்சியில் உள்ள செயல்படாதவர்களை வைத்துக்கொண்டு கட்சி நடத்துகிறார். அ.தி.மு.க ஆலமரம் போன்றது. அதிலிருந்து ஒரு இலையைக்கூட பறிக்க முடியாது என்பதற்கு நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இதில் தினகரன் சின்ன பையன். பாவம் அவருக்கு ஒன்றும் தெரியாது. அவரை விடுங்கள்'' என்று முடித்தார். 


[X] Close

[X] Close