` விபத்தில் சிக்கிக்கொண்டோம்.. தேர்வுப் பணிக்கு வர முடியாது!' - ரத்தக் காயங்களுடன் அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியைகள் | Has humanity faded in the education sector

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (02/03/2019)

கடைசி தொடர்பு:14:20 (02/03/2019)

` விபத்தில் சிக்கிக்கொண்டோம்.. தேர்வுப் பணிக்கு வர முடியாது!' - ரத்தக் காயங்களுடன் அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியைகள்

கல்வி

விபத்தில் படுகாயம் அடைந்த ஆசிரியை சசிகலா

முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் இரண்டு ஆசிரியைகள் தேர்வு மையத்திற்குச் செல்லும்போது டூ விலரில் கீழே விழுந்து முகம், கை, காலில் அடிப்பட்டு ரத்தக் காயத்தோடு சென்றும், அவர்களைப் பணியிலிருந்து விடுவிக்காமல் அலைக்கழித்த சம்பவம் சேலம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்திடம் கேட்டதற்கு, ``சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகள் சசிகலா, பிரேமா. இவர்கள் கோனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அறை கண்காணிப்பாளர் பணிக்கு நியமிக்கப்பட்டார்கள். கடந்த 28-ம் தேதி தேர்வு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் கோனேரிப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்துக்கு சசிகலா, பிரேமா ஆசிரியைகள் இருவரும் டூ விலரில் செல்லும் போது வெள்ளரி வெள்ளி ரிங் ரோடு அருகே கல் சறுக்கிக் கீழே விழுந்ததால் இருவருக்கும் முகம், கை,கால்களில் அடிப்பட்டதோடு சசிகலாவிற்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

பிரேமா ரத்தக் காயத்தோடும் தேர்வு மையத்துக்குச் சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் அங்கப்பனிடம் நடந்த சம்பவத்தைக் கூறி தங்களை தேர்வுப் பணியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால், அங்கப்பன் உங்களுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆசிரியர்களை அனுப்பி விட்டுச் செல்ல வேண்டும் என்றும் எனக்குத் தேர்வுப் பணியிலிருந்து உங்களை விடுவிக்க அதிகாரம் இல்லை. மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று பொறுப்பில்லாமல் பதிலளித்துள்ளார்.

அதையடுத்து ஆசிரியை வலி தாங்க முடியாமல் ரத்தக் காயத்தோடு முகத்தை மூடிக்கொண்டு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கும் மாவட்டக் கல்வி அலுவலரைப் பார்க்க முடியாமல் 2 மணி நேரம் மயக்கம் வந்த நிலையில் சுவரில் சாய்ந்தே இருந்துள்ளார். பிறகு மாவட்டக் கல்வி அலுவலரைப் சந்தித்து தங்களுக்கு நேர்ந்த சம்பவத்தைச் சொல்லி அழுதுவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இப்படி மனித நேயமற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களைப் பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் கடுமையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்கள்.

இதுபற்றி முதன்மைக் கண்காணிப்பாளர் அங்கப்பன், ``பிரேமா என்ற ஆசிரியை முகத்தை மூடிக்கொண்டு நடந்ததைச் சொல்லி தேர்வுப் பணியிலிருந்து விடுவிக்கச் சொல்லிக் கேட்டார். மேடம் தேர்வுப் பணியிலிருந்து விடுவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. மாவட்டக் கல்வி அலுவலருக்கே இருக்கிறது. நீங்கள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு மாவட்டக் கல்வி அலுவலரிடம் தகவலைச் சொல்லி விடுமாறு கூறினேன். மற்றபடி அவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்ற நோக்கம் சிறிதும் இல்லை'' என்றார்.

இதுபற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ``காயத்தோடு தேர்வு மையத்திற்கு ஆசிரியைச் சென்றிருக்கிறார். அவர்களை பணியிலிருந்து விடுவிக்காமல் டி.இ.ஓ அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கிறார். டி.இ.ஓ அலுவலகத்திலும் காயத்தோடு வந்திருக்கும் ஆசிரியை பற்றி டி.இ.ஓ விடம் முறையாகச் சொல்லப்படாததால் அங்கேயும் சற்று கால தாமதம் ஆகிவிட்டது. பிறகு டி.இ.ஓ கவனத்திற்கு வந்ததும் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சற்று தவறு நடந்திருக்கிறது. இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் அறிவுறுத்தப்படும்'' என்றார்.


[X] Close

[X] Close